×

அன்று பருவமழை.... இன்று ஊரடங்கு... நடப்பு ஆண்டில் பெரும் பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்கும்: கிரிசில் அதிர்ச்சி தகவல்

* 69 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார நெருக்கடியை சந்தித்த ஆண்டுகள் 1958, 1966, 1980 காரணம் பருவமழை பொய்தது
* நடப்பு 2020-21 ஆண்டு காரணம் ஊரடங்கு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில், நாட்டின் மிகப்பெரிய பொருளுாதார நெருக்கடியை இந்தியா சந்திக்கும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார சரிவு 25 சதவீதமாக இருக்கும். இதில் இருந்து நடப்பு ஆண்டில் மீளுவதற்கான சாத்தியம் இல்லை என கிரிசில் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கிறது. சர்வதேச நிதியம் உட்பட பல்வேறு அமைப்புகள், இந்தியாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்து வருகின்றன. கடந்த மார்ச் 25ம் தேதி துவங்கிய ஊரடங்கு, 4வது முறையாக நீட்டிக்கப்பட்டு வரும் 31ம் தேதி வரை அமலில் உள்ளது.

ஊரடங்கிற்கு முன்பு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சில இடங்களில் தொழிற்சாலைகள் இயங்க தொடங்கியுள்ளன. இருப்பினும், கடும் பாதிப்பில் இருந்து யாருமே மீளவில்லை.  இந்த சூழ்நிலையில், நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக கிரிசில் நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு நிதியாண்டில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என தெரிவித்துள்ளது.   நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மட்டும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 25 சதவீதம் சரியும். அதிலும்,  ஜிடிபியில் 10 சதவீத இழப்பு நிரந்தரமானதாக இருக்கும். எனவே, நடப்பு நிதியாண்டின் எஞ்சிய 3 காலாண்டுகளில் வளர்ச்சி என்பதற்கு வாய்ப்பே இல்லை.

 இதற்கு முன்பு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு கடந்த 69 ஆண்டுகளில் 3 மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ளது. அதாவது, 1958, 1966 மற்றும் 1980ம் ஆண்டுகளில் இந்த கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம், விவசாயம் பாதிக்கப்பட்டதுதான். பருவமழை பொய்த்ததால் மேற்கண்ட ஆண்டுகளில் விவசாயம் கடும் பாதிப்பை அடைந்தது. அன்று பொருளாதாரத்தின் பெரும் பகுதி பங்களிப்பு விவசாயம்தான்.  ஆனால், இன்று விவசாயத்தை பெரிதும் சார்ந்திராத பொருளாதாரம் உள்ளது. பெரிதும் தொழில்துறைகள்தான் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. இதனால், இவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, ஏராளமானோர் வேலை இழக்க காரணமாக அமையும்.

Tags : India ,crisis , Monsoon, Curfew, Economy, India
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...