×

சோழவந்தான் அருகே நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை

சோழவந்தான்: சோழவந்தான் பகுதியில் பெய்த கோடை மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் கிணற்றுப் பாசனம் மூலம் நெல், வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரு நாட்கள் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தென்கரை ,முள்ளிப்பள்ளம் கிராமங்களில் சுமார் 20 விவசாயிகள் பயிரிட்ட 50 ஏக்கரில்  அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியது.

அதிக அளவில் நெல் மணிகள் உதிர்ந்தும், மண்ணில் புதைந்தும் விட்டது. இதனால் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் உள்ளனர். விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல், உரிய கடனுதவியும் கிடைக்காத நிலையில் இது போல் கஷ்டப்படுத்தும் நிலையில் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து விவசாயி அக்பர் பாதுஷா கூறுகையில்,‘‘கடன் வாங்கி 4 ஏக்கர் நெல் பயிரிட்டிருந்தேன். சில நாட்களாக பெய்யும் கோடை மழையால் முதிர்ந்து அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி விட்டது.

மண்ணில் சாய்ந்ததால் உரிய  மகசூல் கிடைக்காது. பாதித்த பயிர்களை வேளாண்மை துறை, வருவாய் துறை அலுவலர்கள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,’’என்றார். இதே போல் ரிஷபம் கிராமத்தில் விவசாயி பழனியப்பனின் வாழை மரங்களும், சுற்றுப்புற கிராமங்களில் ஆங்காங்கே வாழை, தென்னை மரங்களும் மழையால் சேதமானது.

Tags : rice paddies ,Cholavandan , Cholavandan, paddy, farmers are agony
× RELATED சோழவந்தான் அருகே மயானத்திற்கு செல்ல...