×

கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த அவிநாசி-அத்திக்கடவு திட்டப்பணி தொடக்கம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

பவானி: கொரோனா தொற்று பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவினாசி-அத்திக்கடவு திட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. பொதுப்பணித்துறை கோவை மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் இதனை நேரில் ஆய்வு செய்தனர். கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. பவானி ஆற்றிலிருந்து உபரி நீரை குழாய்கள் மூலம் கொண்டு சென்று, ஏரி, குளங்கள் மற்றும் குட்டைகளில் சேமிக்கும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்தன. இதனால் இந்த பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், கட்டுமானம் உள்ளிட்ட பணிகளில் வடமாநிலத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களும் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இந்நிலையில் தற்போதுள்ள 100 தொழிலாளர்களை கொண்டு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பவானி காளிங்கராயன் அணைக்கட்டு கீழ்பகுதியில் முதன்மை நீரேற்று நிலையம், நல்லகவுண்டன்பாளையம், திருவாச்சி,

எம்மாம்பூண்டி மற்றும் அன்னூர் ஆகிய இடங்களிலும் நீரேற்று நிலையம் அமைக்கும் பணியும், குழாய் பதிக்கும் பணியும் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பொதுப்பணித்துறை கோவை மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பெருந்துறை சிப்காட்டில் இந்த திட்டத்திற்காக இரும்பு குழாய்கள் தயாரிக்கும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது.

Tags : Coronation , Corona, The Avinashi-Attica Project, Public Works Officers
× RELATED தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக...