×

கொரோனாவை கட்டுப்படுத்த மோடி அரசு பிறப்பித்த ஊரடங்கு தோல்வியில் முடிந்துவிட்டதாக ராகுல் காந்தி சாடல்!!

டெல்லி : கொரோனாவை கட்டுப்படுத்த மோடி அரசு எடுத்த முன்னெடுப்புகள் தோல்வியில் முடிந்துவிட்டதாக காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கில் பல தளர்வுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளித்து வருவது தவறான முன்னுதாரணமாக உள்ளது. ஊரடங்கு தளர்வால் ஏற்படும் விளைவுகளை நாம் சந்தித்து வருகிறோம்.

இந்த நிலையில் காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் கொரோனா நோய்த் தொற்று குறையும் என அரசு கூறியது. ஆனால் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தோல்வி அடைந்து விட்டது, எனக் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் மிகவும் உக்கிரமாக பரவும் இந்த சூழலில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதை கடுமையாக சாடியுள்ளார். உலகிலேயே அதிவேகமாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ள இந்தியாவில், மத்திய அரசு தற்போதைய நடவடிக்கை ஊரடங்கின் முழுமையான தோல்வியையே காட்டுவதாக அவர் தெரிவித்து இருக்கிறார். கொரோனா கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கை என்ன என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புலம் பெயர் தொழிலாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர் மற்றும் சாமானிய மக்களுக்கு உதவுதல் தொடர்பாக மத்திய அரசிடம் என்ன யுக்தி இருக்கிறது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஊரடங்கு போடப்பட்டதன் நோக்கம் மற்றும் குறிக்கோள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என குற்றம் சாட்டியுள்ள அவர், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசின் உதவி பெறாமல் கொரோனாவை எதிர்த்து போராடி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.


Tags : Rahul Gandhi ,government ,Modi , Corona, Modi Government, Born, Curfew, Failure, Rahul Gandhi, Sadal
× RELATED நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு...