×

கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதியை உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றிக்காட்ட திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு...!

சென்னை: கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி மக்களுக்கு உதவி செய்யுமாறு திமுகவினருக்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்,  கொரோனா பேரிடர் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கோடு தி.மு.க. சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம் மூலம் பொதுமக்கள் தெரிவித்த  குறைகள் மற்றும் பிரச்னைகளுக்கு எட்டப்பட்ட தீர்வுகள் குறித்து, சென்னை மற்றும் ஈரோடு வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சித் தேர்தலில்  தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக் குழுத் தலைவர்கள் ஆகியோருடன் காணொலிக் காட்சி மூலமாக தொடர்புகொண்டு விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மேலும், ஒன்றிணைவோம் வா உதவும் எண்ணுக்கு வந்த அழைப்புகள் வாயிலாக, தமிழகத்தில், தினமும், 2 லட்சம் பேருக்கு உணவு வழங்கும் வகையில், 22 இடங்களில், சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமூக அக்கறையுள்ள தன்னார்வலர்கள் பலரும் இணைந்து, உதவி செய்து வருகின்றனர். இதற்கிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் வரும் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று பரவி வரும் தற்போது மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மக்களுக்கு, முகக்கவசம், கிருமிநாசினி, அரிசி, பருப்பு , மளிக்கைப் பொருட்களை திமுகவினர் வழங்கினார்கள். கலைஞர் இருந்திருந்தால் திமுகவினர் பொதுமக்களுக்கு செய்த உதவிகளை பார்த்து பரவசம் அடைந்திருப்பார். கலைஞரே பல இடங்களுக்கு பொருட்களை வழங்க ஓடோடி வந்திருப்பார்.

விளம்புநிலை மக்களின் அத்தியாவசிய தேவைகளை சிந்தித்து நிறைவேற்றியவர் கலைஞர். சாமானியர்களின் தலைவராக அடையாளப்படுத்திக் கொண்டு அப்படியே வாழ்ந்து காட்டியவர் கலைஞர். ஒரு லட்சியத்துக்காகப் போராடிய அவரே, லட்சியத்தை நிறைவேற்றும் இடத்துக்கு வந்து நிறைவேற்றிக் காட்டியவர். கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றிக்காட்ட திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


Tags : MK Stalin ,artist ,DMK ,birthday , MK Stalin's invitation to DMK to convert artist's birthday to June 3
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...