×

ஊரடங்கு காலங்களில் நடந்த தீவிர சோதனையில் சாராயம் விற்பனை செய்த 919 பேர் கைது: எஸ்பி தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதில் இருந்து நேற்று வரை சாராய விற்பனையில் ஈடுபட்ட 919 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி சிபிசக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை எஸ்பி சிபிசக்கரவர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், சாராய விற்பனையை தடுக்க தீவிரமான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக, தனிப்படை அமைக்கப்பட்டு தினமும் சோதனைகள் நடத்தப்படுகிறது. பொதுமக்களிடம் இருந்து வரும் தகவல்கள் மற்றும் புகார்கள் அடிப்படையிலும் திடீர் சோதனைகள் நடத்தப்படுகிறது. அதன்படி, ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதில் இருந்து சாராய ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5,650 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. 264 மதுபான பாட்டில்கள், 2,588 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, 108 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை, தொடர்ந்து மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 58,889 லிட்டர் சாராய ஊறல், 22,700 லிட்டர் சாராயம், 213 லிட்டர் கள், 4,597 மதுபாட்டில்கள் என மொத்தம் 83,229 லிட்டர் கைப்பற்றப்பட்டுள்ளது. அதோடு, சாராயம் காய்ச்சும் மூலப்பொருளான வெல்லம் 400 கிலோ, கடுக்காய் 1,410 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய 162 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்ள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன இது தொடர்பாக, 1,006 வழக்குகள் பதிவு செய்து, 919 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : SP , 919 traffickers,arrested ,curfews, SP
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்