×

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 22.60 அடியாக உயர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கிருஷ்ணகிரி அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து, நீர்மட்டம் 22.60 அடியாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 20ம் தேதி முதல் கெலவரப்பள்ளி அணைக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தொடர்ந்து 40.67 அடிக்கு நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும், ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 20ம் தேதி வரை, தண்ணீரின்றி வறண்டு காணப்பட்ட கிருஷ்ணகிரி அணையில், தற்போது நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

கடந்த 20ம் தேதி, கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 14.50 அடியாக இருந்த நிலையில், தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 8 அடி வரை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், நீர்மட்டம் 22.60 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு 78 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சூளகிரியில் 22 மி.மீ மழை பதிவாகி உள்ளது. பெனுகொண்டாபுரத்தில் 5.3 மி.மீ, தேன்கனிக்கோட்டை 5 மிமீ என மொத்தம் 32.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.


Tags : Khelavarapalli Dam ,Krishnagiri Dam ,Water level increase , Water level increase ,Khelavarapalli Dam , 22.60 feet
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவு