×

ஊரடங்கால் வியாபாரிகள் வருகை ‘கட்’ பல கோடி செட்டிநாட்டு மரப்பொருட்கள் முடக்கம்: பல நூறு தொழிலாளர்கள் வேலையிழந்து தவிப்பு

காரைக்குடி: ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வருகையின்றி, பல கோடி மதிப்புள்ள செட்டிநாட்டு மரப்பொருட்கள் விற்பனையின்றி முடங்கி உள்ளது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, ஊரடங்கு உத்தரவு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே செட்டிநாடு, கானாடுகாத்தான், பள்ளத்தூர், காரைக்குடி, கொத்தமங்கலம் உள்பட 76 ஊர்களை உள்ளடக்கியது செட்டிநாட்டு பகுதி என அழைக்கப்படுகிறது. இப்பகுதிகளில் பாரம்பரிய கலைநயமிக்க செட்டிநாட்டு பங்களாக்கள் உள்ளன. இக்கட்டிடங்களில் பர்மாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தேக்கு மரங்களால் செய்த கலைநயமிக்க நிலை, கதவு, ஜன்னல்கள், கலைப்பொருட்கள் உள்பட ஏராளமான மரப்பொருட்கள் உள்ளன. தவிர மார்பிள்ஸ், பெல்ஜியத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கண்ணாடி பொருட்கள், சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பீங்கான் பொருட்கள் ஆகியவை உள்ளன. இவற்றை பராமரிக்க முடியாதவர்கள், தங்களது வீடுகளை விற்பனை செய்து விடுகின்றனர். இந்த வீடுகளின் இன்றைய சந்தை மதிப்பு பல கோடி பெறும். இதனை வாங்கும் வியாபாரிகள் வீடுகளை உடைத்து பொருட்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்து விடுகின்றனர்.

இதனை தமிழகம் முழுவதும் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்த வீடுகளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் மர பொருட்களை காரைக்குடி, ஆத்தங்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மர பொருட்கள் செய்பவர்கள் வாங்கி, அதல் ஷோபா செட், டைனிங் டேபிள், சேர் உள்பட பல்வேறு பொருட்கள் செய்து விற்பனை செய்கின்றனர். தவிர வீடுகளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் கலைநயமிக்க நிலை, கதவு, சிற்பங்களை அப்படியே விற்பனை செய்வார்கள். இதனை வெளிமாநில மற்றும் வெளிநாட்டினர் அதிகம் வாங்கி விற்பனை செய்து செய்கின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வர முடியாத நிலையில், பல தொழிற்கூடங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதுகுறித்து மரப்பொருட்கள் உற்பத்தியாளர் சித்திக் கூறுகையில், ‘‘ஊரடங்கால் வியாபாரிகள் வரவில்லை. ஸ்டார் ஓட்டல்கள் மற்றும் பழைய முறையில் கலைநயமிக்க வீடுகளை கட்டுபவர்கள் இந்த நிலை, கதவு உள்பட பல்வேறு பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். பொதுவாக சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகை அதிகளவில் இருக்கும். ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நம்பி உள்ள பல நூறு தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரமின்றி வாடி வருகின்றனர்’’ என்றார்.



Tags : Multicultural ,timber freeze, several hundred workers sacked
× RELATED காவலர் உயிரிழப்பு: முதல்வர் இரங்கல்