×

மூட்டைக்கு 4 கிலோ வரை குறையும் மர்மம் ரேஷன் கடைகளுக்கு எடை குறைவாக உணவு பொருட்கள் விநியோகம்: உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் விசாரிப்பார்களா?

நாகர்கோவில்: ரேஷன் கடைகளுக்கு எடை குறைவாக உணவு பொருட்கள் கொண்டு வருவது பற்றி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் கூறி உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ரேஷனில் இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜூன் மாதமும் இலவசமாக பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு, ஒரு நபருக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி தற்போது தமிழக ரேஷன் கடைகளில் அரிசி வினியோகம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இரு நபர் கார்டுகளுக்கு 16 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது. தற்போது இதை 12 கிலோவாக குறைத்து, மத்திய அரசின் ஒரு நபருக்கு 5 கிலோ என்ற கணக்கில் மொத்தம் 22 கிலோ கொடுக்கப்படுகிறது. 4 பேர், 5 பேர் உள்ள கார்டுகளுக்கு ஏற்கனவே வாங்கிய அரிசி அளவில், 3 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.  அரிசி அதிகரிக்கப்பட்டு உள்ளதால் இதில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது ஆய்வில் இறங்கி உள்ளனர்.

ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் சென்று அரிசி வினியோகத்தை கண்காணிப்பதுடன், பொருட்கள் வாங்கி செல்லும் நுகர்வோர்களிடமும் விசாரணை நடத்துகிறார்கள். இந்த நிலையில் ரேஷனில் போதிய ஒதுக்கீடு இல்லை.  மூடைகளில் உணவு பொருட்கள் எடை குறைவாக உள்ளது. இந்த இழப்பீடுகளை சரி செய்யாமல் ரேஷன் கடை பணியாளர்கள் மீது குற்றம் சாட்டி அவர்களை பலிகடா ஆக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் கூறினர்.
இது குறித்து தமிழ்நாடு பொது வினியோக ஊழியர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் குமரி செல்வன் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து சமச்சீர் செய்யப்படாமலும், அந்தந்த மாத கலர் நூலினால் தைக்கப்படாமலும் தான் உணவு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு வருகின்றன. பொதுவாக ஒரு மூடையில் 50 கிலோ உணவு பொருட்கள் எடை, சாக்கு எடை 650 கிராம் சேர்த்து 50.650 கிலோ கிராம் இருக்க வேண்டும். ஆனால் அரிசி், சீனி, கோதுமை என அனைத்தும் 46 கிலோ தான் இருக்கும். ஒரு மூடைக்கு 4 கிலோ உணவு பொருள் குறைகிறது. ஏற்கனவே இந்த பிரச்சினை தொடர்பாக எங்கள் சங்கத்தினர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

இதில் உரிய எடை அளவுடன் தான் பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு வழங்கி உள்ளது. உணவு துறை ஆணையரும் இது தொடர்பாக உத்தரவிட்டுள்ளார். ஆனால் கிட்டங்கியில் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை. மாவட்ட வழங்கல் நிர்வாகம், கூட்டுறவு பொது வினியோக துறை, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துறை போன்றவை கண்டு ெகாள்வதில்லை. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் மத்திய அரசின் ஒதுக்கீடும் சேர்த்து 2 மடங்கு, 3 மடங்கு அரிசி கூடுதலாக வழங்க வேண்டும். பணிச்சுமை அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது ரேஷன் கடை ேதாறும் ஆய்வில் இறங்கி உள்ளனர். ரேஷன் கடையில் முறைகேடு நடப்பது போல் அவர்கள் ரேஷன் கடைக்கு வந்து சோதனை செய்கிறார்கள். போலீசார் கிட்டங்கிகளுக்கும் சென்று சோதனை செய்ய வேண்டும். குமரி மாவட்ட அரசு கிட்டங்கிகளில் எடை மேடை கிடையாது. எடை போடாமல் தான் உணவு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு வருகின்றன. எனவே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைக்கு வரும் உணவு பொருட்கள் சரியான எடையில் வந்து சேர மாவட்ட வழங்கல்துறை மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags : Mystery ration ,stores down , 4 kilograms per kilogram.
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...