×

பழநி மலைக்கோயில் வின்ச்சில் பதுங்கியிருந்த 6 அடி மலைப்பாம்பு: தீயணைப்பு துறையினர் பிடித்தனர்

பழநி: பழநி மலைக்கோயில் வின்ச் இயந்திரத்தில் பதுங்கி இருந்த 6 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 60 நாட்களாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மலைக்கோயிலில் 6 கால பூஜைகள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. பழநி மலைக்கோயிலுக்கு செல்ல 3 வின்ச்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது பூஜைகளுக்கு செல்லும் குருக்கள், பாதுகாப்பு பணிக்கு செல்லும் செக்யூரிட்டிகள், கண்காணிப்பு பணிக்கு செல்லும் கோயில் அலுவலர்கள் ஆகியோருக்காக ஒரு வின்ச் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. மலைக்கோயிலில் மயில், குரங்கு போன்றவை அதிகளவு உள்ளன. மலைக்கோயிலின் கட்டிடங்கள் இல்லாத இடங்களில் மரங்கள், செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளன.

இதனால் அங்கு பாம்புகளும் அடிக்கடி வருவது வழக்கம். இந்நிலையில் இயக்கப்படாமல் நின்றிருந்த வின்ச்சின் இழுவை டிரம்மில் நேற்று 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கி இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் ஊழியர்கள், உடனே இதுகுறித்து பழநி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வின்ச் நிலையத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பினை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பிடிபட்ட பாம்பை அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். பக்தர்கள் வர தடை உள்ளதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags : Palani Mountain Temple Winch ,Firefighters , 6-foot python ,Palani Mountain Temple Winch, Firefighters caught
× RELATED வாலாஜாவில் விளையாடியபோது தலையில்...