×

திருப்பரங்குன்றத்தில் யானைப்பாகன் உயிரிழந்தது எப்படி?: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் யானை, பாகன் உயிரிழந்த விவகாரத்தில், பராமரிப்பு குளறுபடி, யானையின் உடல்நிலையை மறைத்தது உள்ளிட்டவைகளே காரணம் என்ற பரபரப்பு தகவல்கள் அம்பலமாகி உள்ளன. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள 14 வயதான தெய்வானை யானை, நேற்று முன்தினம் பாகன் காளிதாசை, மிதித்து கொன்றது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இந்த யானை, பாகன்களை தாக்கி வருவதால் பக்தர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
இந்த கடந்த 2017ம் ஆண்டு முதல் 4 முறை பாகன்கள் மற்றும் உதவியாளர்களை தாக்கியுள்ளது. இதில் 3 முறை நடைபெற்ற தாக்குதலில் 2 பாகன்கள், 2 உதவியாளர்கள் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர். இச்சூழலில்தான் நேற்று முன்தினம் பாகன் பலியாகி உள்ளார். தமிழகத்தில் சுமார் 71 வளர்ப்பு யானைகள் உள்ளன. இவற்றில் கோயிலில் வளர்க்கப்படும் யானைகள், அவ்வப்போது பாகன்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன.

காரணம் என்ன? :
பொதுவாக, வளர்ப்பு மற்றும் கோயிலில் உள்ள யானைகள் அனைத்தும், வெவ்வெறு வனப்பகுதிகளில் இருந்து இருந்து நகர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டவை. பொதுவாக யானைகள் காட்டில் ஒரு நாளைக்கு நீண்ட தூரம் நடந்து சென்று உணவு தேடும் இயல்புடையவை. சாதாரண மண் தரையில் மேடு, பள்ளங்களில் நடந்து செல்வதையே விரும்பக்கூடியவை. இப்படிப்பட்ட சூழலில் வளரும் யானைகளை கோயில்களில் கல், கிரானைட் போன்ற தரைகளில் நிற்க வைப்பது; காற்றோட்டமான சூழல் இல்லாத இடங்களில் அடைத்து வைப்பது; இணை சேராமல் தனித்து விடப்படுவது; யானையின் நிலையை புரிந்து கொள்ளாமல் பாகன்கள் துன்புறுத்துவதால், யானைகள் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாகி கோபமடைகின்றன. சில பாகன்கள் மது போதையில் யானையை சீண்டும் செயல்களில் ஈடுபடுவதால் தாக்கப்படுகின்றனர்.கொரோனா ஊரடங்கால் ஒரே இடத்தில் 2 மாதங்களாக கட்டி வைத்தது, முறையாக உணவு அளிக்காதது உள்ளிட்ட காரணங்களால், உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு, மதுரை கால்நடை மருத்துவ உதவி இயக்குநர் டாக்டர் சிவகுமார் தலைமையிலான குழுவினர், கடந்த 9ம் தேதி சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது, யானைக்கு முறையாக உணவு வழங்க வேண்டும்; வெளியே அழைத்து செல்ல வேண்டுமென அறிவுறுத்தி உள்ளனர்.

ஆனால், இதை கோயில் நிர்வாகம் முறையாக செயல்படுத்தவில்லை என கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே நடந்த சிகிச்சையிலும், யானையை வெளியே அடிக்கடி அழைத்து செல்ல வேண்டும். தனியாக நீச்சல் குளம் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட மருத்துவ ஆலோசனைகளையும் தொடர்ந்து பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.கோயில் யானைகளை முறையாக பராமரித்து, நல்ல காற்றோட்டமான சூழலில் தங்க வைத்து, கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறை வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும். பாகன்களுக்கு அடிக்கடி உடல் மற்றும் மனநல பரிசோதனை செய்ய இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தால், யானைகளின் இதுபோன்ற தாக்குதல்களை கட்டுப்படுத்தலாம். மேலும், சமயபுரம் யானையை போல, திருப்பரங்குன்றம் கோயில் யானையை முறையாக மருத்துவ பரிசோதனை செய்து, வனத்துறைக்கு சொந்தமான முகாமிற்கு கொண்டு சென்று சில காலம் முறையாக பயிற்சி அளிக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி இந்த யானையை, வனத்துறையினரிடம் ஒப்படைப்பதே சிறந்தது என விலங்குகள் ஆர்வலர்கள், பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags : Thiruparankundram , elephant, died , Thiruparankundram
× RELATED திருப்பரங்குன்றம் அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு