×

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் முடங்கியது கோயில் கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கண்ணீர்: குத்தகைக்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

தொண்டாமுத்தூர்: கொரோனா ஊரடங்கு உத்தரவால் கோயில்கள் மூடப்பட்டுள்ளது. இக் கோயில் வளாகங்களை சுற்றி உள்ள கடைகளை ஏலம் எடுத்தவர்கள் தொழில் முடங்கி நஷ்டத்துக்குள்ளாகி உள்ளனர். தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் ஏராளமான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்குரிய நிலங்கள், கடைகள், வீடுகள் மூலம் ஆண்டுதோறும் இந்து அறநிலையத்துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 மாதமாக கோயில்களின் நடை சாத்தப்பட்டு உள்ளன. மேலும், ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வர அனுமதியில்லை. இதனால், கோயில் வளாகத்தில் லட்சக்கணக்கில் கொடுத்து ஏலம் எடுத்த பூக்கடை, தேங்காய், பழம் விற்பனை, பிரசாதம் விற்கும் ஸ்டால்கள், உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இவற்றை ஏலம் எடுத்தவர்கள் கடந்த 2 மாதமாக கடைகள் பூட்டப்பட்டுள்ளதால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மேலும், இக்கடைகளை நம்பி இவற்றில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் ஒரு வருட ஏல உரிமம் ஜூலை முதல் அடுத்தாண்டு ஜூன் 30ம் தேதி வரை மட்டும் தான். ஏலதாரர்கள் உரிமம் பெற்ற அன்றைய தினமே ஏலம் எடுத்த முழு தொகையையும் கோயிலுக்கு செலுத்தி விட ேவண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தான் ஏலம் எடுக்கப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் 20ம் தேதி முதல் கோயில்களின் நடை சாத்தப்பட்டது. இதனால், பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வரவில்லை. தொடர்ந்து 4ம் கட்ட ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டள்ளது. அதன்பிறகும் கோயில்கள் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த 3 மாதமாக கோயில் வளாகத்தில் கடை நடத்தி வருபவர்களும், ஏல தாரர்களும், அவர்களது குடும்பத்தினரும் வாழ்வாதாரங்களை இழந்து வறுமையில் சிக்கி தவித்து வருகின்றனர்.  மேலும், கோயில்கள் திறக்கப்பட்டாலும் கொரோனா பரவாமல் இருக்க பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றிதான் சாமி தரிசனம் செய்ய முடியும். பொதுமக்களிடமும் போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் கோயிலுக்கான வருமானமும், பக்தர்களை நம்பி கடை நடத்தும் ஏலதாரர்களின் வருவாயும் முற்றிலும் பாதிக்கப்படும்.

இதுகுறித்து கோயில் கடை குத்தகைதாரர்கள் கூறுகையில், ‘‘எனவே, ஏலத்தாரர்களிடம் இருந்து வருட குத்தகைக்கான முழுத் தொகையையும் செலுத்திவிட்டோம். 3 மாதங்களாக கடைகள் திறக்கப்படாததால் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். எனவே, ஏலதாரர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் அல்லது ஊரடங்கு காலத்திற்கு நிகராக மறு ஏலம், குத்தகை தேதியை மூன்று மாத காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்’ என்றனர்.  இந்த கோரிக்கையை வலியுறுத்தி, திமுக சார்பில் பேரூர் கழக செயலாளர் அண்ணாதுரை, பொள்ளாச்சி எம்பி சண்முக சுந்தரம், முதல்வர், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோருக்கும் மனு அனுப்பியுள்ளார்.

Tags : buyers ,Temple , Temple shop buyers, tears, lease deadline ,extended?
× RELATED பிரசித்தி பெற்ற குன்றத்தூர்...