அம்பை: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக அமைச்சர் உதயகுமார், ஞானதிரவியம் எம்பி, அம்பை எம்எல்ஏ முருகையா பாண்டியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் உள்ளது சிங்கம்பட்டி ஜமீன். தமிழ்நாட்டில் இருந்த 72 பாளையங்களில் சிங்கம்பட்டியும் ஒன்று. இங்கு 29.09.1931ல் திவான்பகதூர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி ராஜாவுக்கு மகனாக பிறந்தார் தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெயதியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி’ என்ற டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி.
சுதந்திர இந்தியாவில் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. ஆனால், அதற்கு முன்பே தமது தந்தை சிவசுப்ரமணிய தீர்த்தபதி இறந்துவிட்டதால் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி 32வது ஜமீன்தார் ஆக்கப்பட்டார். அப்போது அவர் மைனர் என்பதால் சிங்கம்பட்டி பாளையத்தைத் தனது பராமரிப்பில் எடுத்துக் கொண்டது பிரிட்டீஷ் அரசு.
முருகதாஸ் திர்த்தபதி இலங்கையில் உள்ள கண்டியில் பள்ளிப் படிப்பை முடித்தவர். வில்வித்தை, சிலம்பம், வர்மக் கலை போன்றவற்றை கற்றுத் தேர்ந்தவர். துல்லியமாக துப்பாக்கி சுடும் திறமை கொண்டவர். இவர் இரண்டு கைகளாலும் டென்னிஸ் விளையாடுவார் என்று சொல்லப்படுவதுண்டு. பாலே நடனம் தெரிந்தவர். இவருக்கு மகேஸ்வரன், சங்கராத் பஜன் என்ற மகன்களும், அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகிய மகள்களும் உள்ளனர். இவர் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். தமிழகத்தில் மன்னராட்சி காலத்தில் முடி சூட்டியவர்களின் கடைசி ஜமீன்தாரான இவர் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் சொரிமுத்து அய்யனார் கோயிலில் தை அமாவாசை திருவிழாவில் பட்டம் கட்டி தர்பாரில் எழுந்தருளி பொதுமக்களுக்கு காட்சி தருவதும் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாகசிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி (89) நேற்று முன்தினம் இரவு காலமானார்.
நேற்று மாலை அவரது உடல் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மணிமுத்தாறு தாமிரபரணி ஆறு அருகே உள்ள பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஞானதிரவியம் எம்பி, எம்எல்ஏ முருகையா பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கள் இசக்கி சுப்பையா, நயினார் நாகேந்திரன், ஓய்வு பெற்ற போலீஸ் ஐஜி மாசானமுத்து மற்றும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தீர்த்தபதி
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலையில் இருந்து உருவாகிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆற்றில் தாமிரபரணி தீர்த்தம், வேததீர்த்தம், கல்யாண தீர்த்தம், பாண தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் இருப்பதாலும், சிங்கம்பட்டி ஜமீனுக்கு உட்பட்ட பகுதியாக இருந்த பொதிகை மலை இருந்ததாலும் தீர்த்தங்களுக்கு அதிபதி என்ற பொருளில் இந்த ஜமீன்தார்களுக்கு தீர்த்தபதி என்ற பட்டம் பெயரோடு சேர்ந்தது.