×

சிறப்பு ரயில்கள் மூலம் 2,935 வடமாநில தொழிலாளர்கள் ஜார்க்கண்ட், ஒடிசாவுக்கு பயணம்: மதுரை, திண்டுக்கல்லில் இருந்து கிளம்பினர்

விருதுநகர் / மதுரை / திண்டுக்கல்: மதுரை, திண்டுக்கல்லில் இருந்து சிறப்பு ரயில்களில் ஜார்க்கண்ட், ஒடிசாவை சேர்ந்த 2,935 தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா ஊரடங்கால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பம், குடும்பமாக சொந்த மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். கடந்த வாரம் நாகர்கோவிலில் இருந்து பீகார் சென்ற சிறப்பு ரயிலில் கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 1,440 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் விருதுநகர், அருப்புக்கோட்டையில் இருந்த பீகார் மாநில தொழிலாளர்கள் 160 பேர் 5 பஸ்கள் மூலம் மதுரை ரயில் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்து சிறப்பு ரயிலில் பீகாருக்கு சென்றனர்.

இந்நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டத்திலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 247 தொழிலாளர்கள், 8 பஸ்கள் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களோடு மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தங்கியிருந்த மொத்தம் 1,341 பேர் நேற்று மதுரையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 1,160 பேர், மதுரையில் இருந்து 434 பேர் என மொத்தம் 1,594 தொழிலாளர்கள், ஒடிசாவுக்கு கிளம்பி சென்றனர். இவர்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். முன்னதாக, விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து தொழிலாளர்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் கண்ணன், சிராஸ்தார் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags : Jharkhand ,Odisha ,Northern Railway , 2,935 Northern Railway workers , special trains , Jharkhand, Odisha
× RELATED ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு