×

பராமரிப்பு இல்லாததால் அருப்புக்கோட்டையில் பாலம் இடியும் அபாயம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை - மதுரை ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலம் பக்கவாட்டில்  முட்செடிகள் மரம்போல் வளர்ந்து வருவதால் பாலம் இடியும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 600க்கு மேற்பட்ட கி.மீ சாலைகளை தனியார் வசம் பராமரிப்பு மற்றும் புதிய சாலைகள் அமைக்க ஒப்படைக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை - மதுரை ரோட்டில் டவுன் சாலையில் உள்ள ரயில்வே  மேம்பாலம் வழியாக மதுரை செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன.  மேலும்  மேம்பாலத்தை அடுத்துள்ள புறநகர் பகுதி மக்கள் டூவீலர்களிலும், நடந்தும் நகருக்குள் வந்து செல்கின்றனர்.  பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்புச்சுவர் பக்கவாட்டில் செடிகள், மரம்போல் வளர்ந்துள்ளது. தற்போது அருப்புக்கோட்டை ரயில்வே மேம்பாலத்த்தில் முட்செடிகள் புதர் போல் மண்டி உள்ளது. அத்துடன் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இவற்றின் வேர்கள் உட்பகுதியில் செல்கிறது.  இதனால் உட்பகுதியில் மண் தடுப்புச்சுவற்றில் வைக்கப்பட்டுள்ள கற்களை பெயர்த்து வெளியில் வந்துள்ளது.  இதனால் பாலத்தின் உறுதித்தன்மை பலம் இழந்து வருகிறது.  

நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலைகள் பராமரிப்பு செய்யும் போது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பாலத்தின் தடுப்புச்சுவர் பகுதியில் வளரும் செடிகளை அவ்வப்போது சாலைப்பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். தற்போது பணிகள் தனியார் வசம் இருப்பதால் பராமரிப்பு பணிகள் முறையாக செய்வதில்லை.  இதனால் தடுப்புச்சுவரில் வளர்ந்துள்ள செடிகள் பாலத்தின் மேல் வரை வளர்ந்து டூவீலரில் செல்வோர், பஸ்களின்  ஜன்னல் ஓரம் அமர்ந்து செல்வோர் கண்களை பதம் பார்க்கிறது.  எனவே, பாலத்தின் தடுப்புச்சுவரில் வளர்ந்துள்ள செடிகளை வேரோடு வெட்டி பராமரிப்பு செய்ய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால்  பாலம் உறுதித்தன்மை இழந்து இடிந்துவிழும் அபாயம்
உள்ளது.

மேலும் காந்திநகர் மதுரை- தூத்துக்குடி நான்குவழிச்சாலையில்  ஒரு ரயில்வே மேம்பாலம் மற்றொரு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் தடுப்புச்சுவரிலும் செடிகள் வளர்ந்து முட்புதர்போல் மண்டி கிடக்கிறது.  இதனாலும் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. தற்போது பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில் பாலங்களை சீரமைக்கவும்,  நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் பாலத்தின் பக்கவாட்டில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : bridge ,Aruppukkottai , Due,maintenance, bridge,Aruppukottai , risk
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...