×

சென்னையில் ஒரே நாளில் 10 பேர் பலி: வேகமெடுக்கும் இறப்பு எண்ணிக்கையால் மக்கள் அச்சம்

சென்னை: கொரோனா தொற்றால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 10 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர். நாளுக்கு நாள் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தினசரி 500 முதல் 600 வரை கூடிக்கொண்டே போவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 548 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 17,082 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் நோய் தொற்றால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சென்னையில் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 19 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இது தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகபட்சமாகும்.  இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையில் நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, மயிலாப்பூரை சேர்ந்த 63 வயது மூதாட்டி பன்நோக்கு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். பெரம்பூரை ேசர்ந்த 71 வயது முதியவர் சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். கொடுங்கையூரை சேர்ந்த 69 வயது மூதாட்டி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். சூளைமேடு பகுதியை சேர்ந்த 86 வயது முதியவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

விருகம்பாக்கத்தை சேர்ந்த 54 வயது நபர், வண்ணாரப்ேபட்டையை சேர்ந்த 65 வயது முதியவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் ராஜாஜிபுரத்தை சேர்ந்த 50 வயது நபர், கொடுங்கையூரை சேர்ந்த 46 வயது நபர் மற்றும் நேற்று மாலை புதுப்பேட்டையே சேர்ந்த 82 வயது முதியவர், கொண்டிதோப்பு பகுதியை சேர்ந்த 77 வயது முதியவர் ஆகியோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். சென்னையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் உயிரிழந்து வரும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தலைநகரமான சென்னையில் வசித்து வரும் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.



Tags : Chennai , Chennai, 10 killed, corona, curfew
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...