×

நடைமேம்பாலத்தை சீரமைக்கும்போது தவறி விழுந்து உயரழுத்த மின்சார கம்பிக்கு மேல் அந்தரத்தில் தொங்கிய தொழிலாளி

* துரிதமாக செயல்பட்டு மீட்டார் வாலிபர்
* கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

சென்னை: நடைமேம்பாலத்ததை சீரமைக்கும் போது தவறி விழுந்து உயரழுத்த மின்சார கம்பிக்கு மேல் அந்தரத்தில் தொங்கிய தொழிலாளியை, உடன் பணியாற்றிய வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்டார். இச்சம்பவம் கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேம்பால சீரமைப்பு பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதில், ஆந்திர மாநிலம் விஜயநகரம் பகுதியை சேர்ந்த திருப்பதி (45) என்பவர் ஈடுபட்டிருந்தார். இவர், நேற்று ட்ரில்லிங் மெஷின் மூலம் கான்கிரீட்டை உடைத்தபோது, ட்ரில்லிங் மெஷினின் வயர் நடைபாதை கீழ் செல்லும் உயரழுத்த மின்சார கம்பி மீது உரசியது.

இதனால் அதிக சத்தத்துடன் ட்ரில்லிங் மெஷின் வயர் வெடித்து சிதறியது. இந்த சத்தத்தால் அதிர்ச்சியடைந்த திருப்பதி, எதிர்பாராத விதமாக நடைமேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்தார். உடனே சுதாரித்துக்கொண்ட அவர், நடைபாதையின் இரும்பு கம்பியை பிடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கினார். அவருக்கு கீழே உயரழுத்த மின்சார கம்பி இருந்ததால், அலறி கூச்சலிட்டார்.உடனே, சக தொழிலாளியான ராணிப்பேட்டையை சேர்ந்த  கோடீஸ்வரன் (26) துரிதமாக செயல்பட்டு கயிறு உதவியுடன் திருப்பதியை கட்டி, மற்ற தொழிலாளர்கள் உதவியுடன் உயிருடன் மீட்டார்.

அவர் மட்டும் கீழே விழுந்து இருந்தால் உயரழுத்த மின் கம்பியில் சிக்கி கருகி உயிரிழந்து இருப்பார். துரிதமாக செயல்பட்டு சக ஊழியரை காப்பாற்றிய கோட்டீஸ்வரனை அதிகாரிகள் பாராட்டினர். இந்த சம்பவத்தால் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : walkway , Walkway Bridge, Kodambakkam Railway Station, Worker
× RELATED பங்குனி மாத பூஜை, ஆறாட்டு திருவிழா: சபரிமலை கோயில் நடை 14ல் திறப்பு