×

டெல்லியின் இருந்து பெங்களூருவிற்கு தனியாகவே பயணம் நான் அம்மாவ... பார்க்கணும்... விமானத்தில் வந்த 5 வயது சிறுவன்

* வீட்டில் தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அறிவுரை

பெங்களூரு: டெல்லியில் இருந்து தனியாக விமானத்தில் வந்த 5 வயது சிறுவனின் துணிகர செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 3 மாத பாசப்போராட்டத்திற்கு பின்னர் பாட்டி வீட்டில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த சிறுவன் தாயுடன் அனுப்பி வைக்கப்பட்டதுடன், 14 நாட்கள் வீட்டு தனிமையில் வைக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 25ம் தேதியில் இருந்து நாடு தழுவிய பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் ரயில், பஸ், விமான சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டது.  

இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கில் சிறிது தளர்த்தப்பட்டு நேற்று முதல் விமான சேவை துவங்கியது. அதன்படி நேற்று டெல்லியில் இருந்து பெங்களூருவிற்கு 5 வயது சிறுவன் ஒருவன் தனியாக பயணித்து வந்திருப்பது விமான பயணிகள் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நாடே கொரோனா பீதியில் உறைந்துள்ள நிலையில், சிறுவனின் இந்த துணிச்சல் பயணம், சமூக வலைத்தளங்களில் மட்டுமின்றி, மீடியாக்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பெங்களூருவை சேர்ந்த மஞ்சுத் சர்மாவின் மகன்தான் இந்த 5 வயது சிறுவன் விஹாந்த் சர்மா. கடந்த பிப்ரவரி மாதம் தாத்தா, பாட்டியுடன் சிறுவன் விஹாந்த் டெல்லிக்கு சென்றான்.

இவன் சென்ற சில நாட்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக விமான சேவை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சிறுவன் விஹாந்த் பாட்டி வீட்டில் இருந்து பெங்களூரு வர முடியாமல் போனது. தாயும் டெல்லிக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் லாக்டவுனில் சிக்கி கொண்டார். பொது ஊரடங்கால், மிகவும் சிரமத்திற்கு ஆளான சிறுவன், பாட்டி வீட்டிலேயே 3 மாதங்களை கழிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று உள்நாட்டு விமான சேவை இயக்கப்படுவதாக தகவல் கிடைத்ததும், சிறுவனின் தாய், மகன் பெங்களூரு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

குறிப்பாக விமானத்தில் மகன் பாதுகாப்பாக பயணிக்க வேண்டுமென்று, அவனுக்கு சிறப்பு பிரிவிற்கான டிக்கெட் முன்பதிவு செய்தார். மேலும் விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் முறையிட்டு தனது மகனை பத்திரமாக பெங்களூரு அனுப்பி வைக்கும்படி கேட்டு கொண்டார். அதன்படி நேற்று அதிகாலை டெல்லி விமான நிலையத்திற்கு பாட்டி, தாத்தாவுடன் வந்த சிறுவன், விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் பெங்களூரு விமானத்தில் ஏற்றப்பட்டான். சிறப்பு பிரிவினருக்கான இருக்கையில் அமர்த்தப்பட்ட அவனுக்கு முன்னதாக அனைத்து வகையான கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் சிறுவன் உடல்நிலை சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சிறுவன் 2 மணி நேரம் பயணத்திற்கு பின்னர் பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார்.
முன்னதாக இங்கு அவனது தாய் காத்திருந்தார். விமான நிலைய அதிகாரிகள் சிறுவனை பாதுகாப்பாக கொண்டு வந்து, தாயிடம் ஒப்படைத்தனர். தனியாக யார் துணையும் இல்லாமல் பெங்களூரு விமான நிலையத்தில் வந்து இறங்கிய அந்த சிறுவனின் துணிகரத்தை பார்த்து விமான பயணிகளே ஆச்சரியம் அடைந்து பாராட்ட தொடங்கினர்.
 இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் அவருக்கு தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்டது.

பின்னர் தாயிடம் ஒப்படைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மகனை உங்கள் பாதுகாப்பில், வீட்டு தனிமையில் வைத்து கண்காணித்து கொள்ளும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து சிறுவன் விஹாந்த் தனது தாயுடன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வீட்டை வந்தடைந்தார். இங்கு 14 நாட்கள் வீட்டு தனிமையில் வைத்திருப்பதாக தாய் தெரிவித்துள்ளார். 5 வயது சிறுவன் தனியாக பெங்களூருவிற்கு பயணித்து வந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.


Tags : Delhi ,Bangalore , Delhi, Bangalore, mother, 5 year old boy
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...