×

கொரோனா வார்டுகளாக மாறிய ரயில் பெட்டியை மீண்டும் மாற்றுவதால் 50 கோடிக்கு மேல் வீண் செலவு: தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு

சென்னை: கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள் மீண்டும் பெயின்ட் அடிக்கப்பட்டு பயணிகளை ஏற்றிச் செல்ல தயாராகி வருகின்றன. எதற்குமே பயன்படுத்தப்படாமல் ரயில்வே துறைக்கு ரூ.50 கோடிக்கு மேல்  வீண் செலவு ஏற்பட்டுள்ளது என்று தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டியுள்ளன.   கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி, சிகிச்சை அளிக்க மருத்துவமனை வசதி கிடைக்காமல் போவதை தவிர்ப்பதற்காக ரயில்வே பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றும் முடிவை இந்திய ரயில்வே எடுத்தது. இதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்தது.  நாடு முமுவதும்  முதற்கட்டமாக 2,500 ரயில் பெட்டிகளில்  40 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யப்பட்டன. இந்த ரயில் பெட்டிகளில் படுக்கைகளுடன் 10 சிறிய தனி அறைகள் அமைக்கப்பட்டன.

மருத்துவ கருவிகள் மற்றும் சாதனங்களை பயன்படுத்தும் வகையில் 220 வோல்ட், 415 வோல்ட் மின்சார பிளக் பாய்ன்ட் பொருத்தப்பட்டன. 4 பாட்டில்களை வைக்கும் அளவுக்கு ஹோல்டர் பொருத்தப்பட்டது. ஒரு ரயில் பெட்டியில் உள்ள 4 கழிவறைகள், 2 குளியலறைகளாக மாற்றப்பட்டன.  தமிழகத்தில் பெரம்பூர் பணிமனையில் 110 ரயில் பெட்டிகளும்,  திருச்சி கோட்டத்தில் 111 பெட்டிகள் உட்பட நாடு முழுவதும்  அனைத்து ரயில்வே மண்டலங்களில் 573 கோச்சுகள் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் தனி வார்டுக்கு மாற்றப்பட்டு தயார் நிலையில் வைத்திருந்தனர்.  ஆனால் எந்தவித மருத்துவ குழுவின் ஆய்வும் நடைபெறவில்லை. மேலும் மாநில அரசும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் 100 சதவீத பணிகள் முடிந்த நிலையில் வார்டுகளில் ரயில் பெட்டிகள் அப்படியே பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 இதற்காக ஒரு பெட்டிக்கு ரூ. 89 ஆயிரம் வரை செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரம்பூர்,  திருச்சி உள்பட பல்வேறு கோட்டங்களில்  தயாரிக்கப்பட்ட 573  பெட்டிக்கு  ரூ.5 கோடி 9 லட்சத்து 97 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை மாற்றப்பட்ட 5000 ரயில் பெட்டிகளுக்கு மட்டும் சுமார் 45 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. .இதனால் வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில்களை மீண்டும் பயணிகள் பெட்டியாக மாற்றும் செய்யலாம் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ரயில் பெட்டிகளை மீண்டும் பழைய நிலைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும்  ரயில் பெட்டி ஆக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

 கொரோனா சிகிச்சை அளிக்கும் பெட்டியாக மாற்றிய ரயில் பெட்டிகள் அனைத்தும் எந்தவிதமான பயன்பாட்டுக்கும் கொண்டு வராமல் மீண்டும் பழைய நிலைக்கு அவற்றை மாற்றுவது தற்போதுள்ள நிலையில் ரயில்வே துறைக்கு வீண் செலவாக உள்ளது.  இதனால் ரயில்வேக்கு தேவையற்ற வருவாய் இழப்பு ஏற்படும் என்று பல்வேறு தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. கொரோனா தொற்று குறைவாக இருந்த நேரத்தில் ரயில்களில் மாற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், தற்போது கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் நிலையில் மீண்டும் பயணிகள் ரயில் பெட்டிகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.Tags : unions ,Corona Ward ,Corona , Corona Wards, Railway Box, Corona, Curfew, Trade Unions
× RELATED நெல்லை கொரோனா வார்டில் இறந்தவர் உடலை...