×

வெயிலுக்கு இணையாக சதமடிக்கும் டாஸ்மாக் வசூல்: ஒரே நாளில் 141 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

சென்னை: தமிழகத்தில் வெயிலுக்கு இணையாக டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை வருவாய் சதமடித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 141 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. கொரோனாவால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வேலூர், சென்னை, திருச்சி, திருவள்ளூரில் திருத்தணி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் நாள் தோறும் சதம் அடித்து வருகிறது. இதுபோல், வெயிலை அடுத்து டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனையும் நாளுக்கு நாள் சதம் அடித்து வருகிறது.தமிழகத்தில் வழக்கமான நாட்களில் 80 கோடிக்கு மதுவிற்பனை ஆகும். விழா நாட்களில் இது இரட்டிப்பாகும்.

இந்நிலையில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. அன்றைய தினம் 173 கோடிக்கு மதுவிற்பனை ஆனது. இதையடுத்து, 16ம் தேதி பல்வேறு விதிமுறைகளுடன் கடைகள் திறக்கப்பட்ட போதும்கூட தினமும் 100 கோடிக்கு மேல் விற்பனையானது. இந்த விற்பனை 20ம் தேதிக்கு பிறகு சற்று குறையத்தொடங்கியது. கடைகளில் போதிய இருப்பு இல்லாததால் விற்பனையில் சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாள் தோறும் 85 கோடி முதல் 95 கோடி வரையில் மட்டுமே வருவாய் கிடைத்தது. இந்தநிலையில், மதுவிற்பனை 23ம் தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தை அடைந்துள்ளது. அதன்படி, வெயிலின் சதத்திற்கு இணையாக கடந்த 23ம் தேதி 120.4 கோடிக்கும், நேற்று முன்தினம் 141.4 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Tags : TASMAC , Weil, Tasmac collections, Brewery sales
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை