×

ஊரடங்கு காரணமாக 60 நாள் கதவடைப்பால் மெஷின்கள் ரிப்பேர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 50% கம்பெனிகள் மூடல்

* பராமரிப்பு பணிக்கும் ஊழியர்கள் கிடைக்கவில்லை
* கொரோனா பீதியில் தொழிலாளர்கள் வரவில்லை
* அரசு நிதிஉதவியை எதிர்பார்க்கும் தொழில்முனைவோர்


சென்னை:  அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கம்பெனிகள் செயல்பட அரசு அனுமதி அளித்தும், ஊரடங்கு காரணமாக திடீர் கதவடைப்பால் இயந்திரங்கள் பழுதாகி விட்டது. பராமரிப்பு பணிக்கும் ஊழியர்கள் கிடைக்காத நிலை உள்ளது. எனவே, தொழில் தொடங்க அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என சிறு, குறு தொழில் முனைவோர் வலியுறுத்தி உள்ளனர்.ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டை அம்பத்தூர் தொழிற்பேட்டை. இது சுமார் 1400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், 30 சதவீதம் பேர் பெண் தொழிலாளர்கள்.

மேற்கண்ட தொழில் நிறுவனங்களில் ஆட்டோமொபைல், விவசாயம்,  கட்டுமானம், திருமண மண்டபம், ஓட்டல்கள், மின்சாரம், தீயணைப்புத்துறை தொடர்பாக உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் ₹75 கோடிக்கு உதிரிபாகங்கள் உற்பத்தியாகிறது.  இவ்வாறு உற்பத்தியாகும் இயந்திர உதிரி பாகங்களை ஆர்டரின் பேரில் தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினால், கடந்த 60 நாட்களுக்கு மேல் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால், தொழில் முனைவோருக்கு சுமார் ₹4,500 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழக அரசு நேற்று முதல் கம்பெனிகளை திறந்து 25% தொழிலாளர்களுடன் பணி செய்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது.

இதையடுத்து, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நேற்று பல நாட்களாக மூடிக்கிடந்த 50% கம்பெனிகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. அந்த கம்பெனிகளிலும் எவ்வித பணிகளும் தொடங்கவில்லை. மேலும், அங்கு ஒரு சில தொழிலாளர்களுடன் இயந்திரங்களின் பராமரிப்பு பணி மட்டுமே நடந்து வருகிறது. இதோடு மட்டுமல்லாமல், பல கம்பெனிகளில்  இயந்திரங்கள் பழுதாகி உள்ளன. இதனால், அங்கு  கம்பெனிகளில் பணிகளை தொடங்க முடியவில்லை. மீண்டும் கம்பெனிகளில் பணிகளை முறையாக தொடங்க இன்னும் பல நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து, தமிழக சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் டி.மூர்த்தி கூறியதாவது:  ஊரடங்கு உத்தரவினால் கடந்த 60 நாட்களாக மேலாக கம்பெனிகள் கதவடைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், சிறு, குறு தொழில் முனைவோர் அனைவரின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் கம்பெனியை திறந்து தொழில் தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனை அடுத்து, கம்பெனிகள் தொழில் தொடங்க வேண்டுமானால், முதலில் அனைத்து இயந்திரங்களையும் பராமரிக்க வேண்டும். பல இயந்திரங்கள் பழுதடைந்து கிடக்கிறது. அதனை, சரி செய்ய வேண்டுமானால் பல லட்சம் வரை செலவாகும். திடீர் கதவடைப்பால் தொழில் முனைவோர் அனைவரும் எந்த வருவாயும் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, நாங்கள் செய்து கொடுத்த ஆர்டர்களுக்கு பெரிய கம்பெனிகள் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை தர வேண்டிய பணத்தை இன்னும் தரவில்லை. இதனால், தற்போது, தொழிலை உடனடியாக தொடங்க இயலாது. இதோடு மட்டுமல்லாமல், பெரிய நிறுவனங்கள் எங்களுக்கு பணிக்கான ஆர்டர்களை கொடுத்தால்தான் தொழிலை தொடங்க முடியும். மேலும், அவர்கள் எங்களுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், கம்பெனிகளை உடனடியாக நடத்துவது கேள்விக்குறியாக உள்ளது. எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வங்கி மூலம் வட்டியில்லா கடன் உதவி செய்ய வேண்டும்.

மேலும், குறைந்தது ஒரு நிறுவனத்திற்கு 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை கடன் வழங்க வேண்டும். அப்படி செய்தால்தான் கம்பெனிகளை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியும்.  இந்த கடன் தொகையும், வங்கிகள் 36 மாதம் கழித்து வட்டியில்லா கடனாக வசூலிக்க வேண்டும். மேலும், கம்பெனிகளை திறக்க பல மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு வர வேண்டும். அவர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு சென்று விட்டனர். அவர்கள் வருவதற்கு பஸ், ரயில் போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை. அப்படியே போக்குவரத்து தொடங்கப்பட்டாலும் சென்னையில் உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு, அவர்கள் வர அச்சப்படுவார்கள்.

ஏனென்றால் சென்னையில் தான் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், அவர்கள் தங்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் என கருதி வேலைக்கு வர தயக்கம் காட்டுவார்கள். மேலும், வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அவர்கள் கொரோனா நோய் தொற்றுக்கு பயந்து உடனடியாக வரமாட்டார்கள். அவர்கள் வர பல மாதங்கள் ஆகும். தற்போது அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணியாற்றி வரும், பெரும்பாலானோர் வடமாநிலத்தவர்கள். இதனால், அவர்கள் வராவிட்டால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும். இதனால் தொழிலை முன்பு போல் தொடங்குவதற்கு குறைந்தது ஒரு வருடத்திற்கும் மேலாகும்.

கடந்த ஆறு மாதத்திற்கு  கட்ட வேண்டிய ஜி.எஸ்.டி.யை கட்ட முடியாது. இதனை மத்திய, மாநில அரசுகள் 6 மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். இந்தியாவிலேயே, அதிக அளவு ஜி.எஸ்.டி வருவாய் தரும் மாநிலமாக தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு ஜி.எஸ்.டி கட்டுவதற்கு கால அவகாசம் தர வேண்டும். இவ்வாறு கம்பெனிகளை தொடங்க அரசுகள் சலுகைகள் அளித்தால்தான் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் உயிர் பெற்று தொழில் உற்பத்தியை தொடங்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகள் அலைக்கழிப்பு
தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே வங்கிகள் மூலம் கடன் பெற்றுள்ளனர். அதற்குரிய வட்டியை தற்போது கட்ட முடியாது. இந்த வட்டி தொகையை வசூலிக்காமல், ஆறு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும். மேலும், தற்போது மத்திய அரசு, தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. ஆனால், தற்போது வங்கிகளுக்கு சென்று தொழில்முனைவோர் அணுகினால், அதற்குரிய அரசாணை எங்களுக்கு இன்னும் வரவில்லை எனக்கூறி அலைக்கழிக்கின்றனர்.Tags : Ambattur ,complex ,closure , Curfew, Machines Repair, Ambattur Workshop, 50% of Companies Closure
× RELATED உதகையில் தனியார் நிறுவன ஊழியர் மூலம் 95...