×

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பான காட்சி ஊரடங்குக்குப்பின் டெல்லிக்கு பறந்தது முதல் உள்நாட்டு விமானம்

* டிக்கெட்டுகள் டிஸ்பிளேயில் சோதனை
* பயணிகளுக்கு தீவிர மருத்துவ சோதனை

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக முடக்கப்பட்ட உள்நாட்டு பயணிகள் விமான சேவை நேற்று தொடங்கியது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று காலையில் இருந்து விமான சேவை தொடங்கியது. முதல் விமானமாக மதுரைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் காலை 5.30 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. போதிய பயணிகள் இல்லாததால் தாமதமாக காலை 7.15 மணிக்கு 36 பயணிகளுடன் புறப்பட்டது. அதனால் முதல் விமானமாக காலை 6.35 மணிக்கு ெடல்லிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. இதில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த 120 பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 4 பேருக்கு சளி, காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.

அதையடுத்து காலை 6.50 மணிக்கு தனியார் ஏர்லைஸ் விமானம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது.  மும்பை, கொல்கத்தா தவிர மற்ற இடங்களான டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, மதுரை, அந்தமான், கோவை, திருவனந்தபுரம், அகமதாபாத், ராஜ்கோட், வாரணாசி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. டெல்லியில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை வந்த ஏர் ஏசியா விமானத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 29 பேர் மட்டுமே இருந்தனர்.
இதையடுத்து காலை 9.15 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வந்த இரண்டாவது விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட் 109 பேர் வந்தனர். பயணிகள் வெளியில் வரும்போது தங்கள் செல்போனில் உள்ள தமிழ்நாடு இ-பாஸை காட்டிவிட்டு வந்தனர். இ-பாஸ் வாங்காமல் வந்தவர்கள் வெளியில் செல்ல முடியவில்லை.

எனவே அவர்கள் இ-பாஸ் வாங்க உள்நாட்டு முனையத்திற்குள் இரண்டு சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் இ-பாஸ் பெற்றுக் கொண்டு வெளியில் வந்தனர். நேற்று மாலை வரை வந்த பயணிகள் அனைவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வதாக கூறிவிட்டுச் சென்றனர். ஆனாலும் நோய் தொற்றுடன் யாராவது வந்தால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ், அரசு ஏற்பாட்டில் தனிமைப்படுத்தப்படும் மையத்திற்கு அழைத்து செல்ல தனி பஸ்களும் தயார் நிலையில் இருந்தன.  சென்னையிலிருந்து நேற்று காலை முதல் இரவு வரை 19 விமானங்கள் புறப்படுவதற்கும், 16 விமானங்கள் சென்னைக்கு வருவதற்கும் மொத்தம் 35 விமான சேவைகளுக்கான தற்காலிக கால அட்டவணை தயாரிக்கப்பட்டது.

ஆனால் போதிய பயணிகள் இல்லாமல் சென்னையில் இருந்து பெங்களூரு, டெல்லி செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடி வழியாக சென்னை வர இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. மேற்கு வங்கம், மகாராஷ்டிரா அரசுகள் எதிர்ப்பு காரணமாக கொல்கத்தா, மும்பைக்கு சென்னையிலிருந்து விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அதோடு பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
புறப்பாடு பகுதியில் வழக்கமாக நுழைவாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், பயணிகளிடம் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையை சரிபார்த்து அனுப்புவார்கள். ஆனால் தற்போது நுழைவாயில் பகுதியில் ஒரு கேமராவும், டிவியும் அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகள், தங்களது டிக்கெட், அடையாள அட்டையை கேமராவில் காட்டவேண்டும். அது, டிவி ஸ்கிரீனில் பெரிய அளவில் தெரியும். சுமார் 6 அடி தூரத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் கண்காணித்து சரியாக இருந்தால், பயணியை உள்ளே செல்ல அனுமதிக்கிறார். இதுபோல் உள்ளே போர்டிங் பாஸ் வழங்கும் இடத்திலும் அனைத்தும் இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் மாஸ்க்குகள் அணிந்து சமூக இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வைத்து அனுப்புகின்றனர்.

தனியார்மயமாக்கலை கண்டித்து போஸ்டர்
விமான நிலையங்கள் உள்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க போவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இது விமான நிலைய ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில், விமானநிலையம், விமானநிலைய இயக்குநர் அலுவலக வாசல் போன்ற இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். விமான சேவைகள் தொடங்கிய முதல் நாளிலேயே ஊழியர்களின் எதிர்ப்பு போஸ்டர்கள் பயணிகளின் கவனத்தை ஈர்ந்தது.



Tags : flight ,Delhi ,curfew ,Chennai airport , hennai airport, curfew, Delhi, domestic flight
× RELATED சென்னையில் இருந்து மொரிஷியஸ்...