×

தெலங்கானாவில் கிணற்றில் சடலங்கள் மீட்பு வழக்கில் திருப்பம்; கள்ளத் தொடர்புக்கு தடையாக இருந்ததால் 9 பேர் கொலை: குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொன்ற 4 பேர் கைது

வாரங்கல்: தெலங்கானாவில் கிணற்றில் 9 சடலங்கள் மீட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, கள்ளத் தொடர்புக்கு தடையாக இருந்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கொர்ரகுண்டா பகுதியில் சதீஷ் குமார் என்பவருக்கு சொந்தமான சணல் தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். கொரோனா தொற்றுகாரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

தனக்கு சொந்தமான ஒரு வீட்டில் தொழிலாளர்களை சதீஷ் குமார் தங்க வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தொழிலாளர்கள் தங்கியிருந்த  இடத்தை சதீஷ் குமார் சென்று பார்த்தபோது தொழிலாளர்களை காணவில்லை. அப்பகுதியில் தேடியபோது ஒரு கிணற்றில் 4 பேரின் உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த வாரங்கல் போலீசார், வருவாய் துறையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 நாட்களாக போராடி 9 பேரின் உடல்களை மீட்டனர். மேற்கண்ட 9 பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக வாரங்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர்களின் உடல்களில் காயம் இல்லாததால் தற்கொலை வழக்காகவே போலீசார் பதிவு செய்தனர். இறந்தவர்களில் 3 வயது குழந்தை உட்பட 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற 3 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 2 பேரை காணவில்லை. போலீஸ் விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் கொல்கொத்தாவை சேர்ந்த மக்சூத் (50), இவரின் மனைவி நிஷா (45) ஆகியோர் கடந்த  20 ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்பு தேடி தெலங்கானா வந்தனர். வாரங்கல் சணல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர்.

இவர்களுக்கு  ஷாபாத் (22), சோஹைல் (20) என்கிற மகன்களும், பூஸ்ரா (19) என்கிற மகளும் இருந்தனர். பூஸ்ராவிற்கு 3 வயதில் ஒரு மகன் இருந்தான். கருத்து  வேறுபாடு காரணமாக பூஸ்ரா கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் பெற்றோருடன்  வசித்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மர்மமான முறையில் 9 பேரும் இறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுெதாடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, தனிப்படை போலீசார் கூறியதாவது: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர், அதே சணல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். வாரங்கலில் உள்ள கரீமாபாத் பகுதியைச் சேர்ந்தவர் யாகூப். இவர்களுடன் பீகாரைச் சேர்ந்த நண்பர்கள் மோகன் மற்றும் மன்கூஸ். சம்பவ நாளன்று இரவு கணவரைவிட்டு பிரிந்து பெற்ேறாருடன் இருக்கும் மக்சூத்தின் மகள் பூஸ்ரா மகனின் பிறந்தநாளை  அனைவரும் கொண்டாடி உள்ளனர். சர்க்கரை பொங்கல் சமைத்து  சாப்பிட்டுள்ளனர். அப்போது, மயக்க மாத்திரைகளை குளிர்பானங்களில் கலக்கி கொலையான 9 பேருக்கும் குற்றவாளிகள் 4 பேரும் கொடுத்துள்ளனர்.

பின்னர், 9 பேரின் உடல்களை சுப்ரியா குளிர் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள கிணற்றில் வீசினர். விசாரணையில்  பூஸ்ராவுடன், சஞ்சய் குமார் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனை, பூஸ்ராவின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால், முதன்மை குற்றவாளி சஞ்சய் குமார், மக்சூத் குடும்பத்தினரிடம் மறைமுக வெறுப்பை வளர்த்துக் கொண்டார். இதற்கிடையில், மக்சூத் குடும்பத்துடன் சணல் தொழிற்சாலையில் பணியாற்றும் ராம் குமார் மற்றும் ஷியாம் குமார் ஆகிய இரு பீகார் இளைஞர்கள் நட்பு கொண்டிருந்தனர். இது, சஞ்சய் குமாருக்கு பிடிக்கவில்லை.

அதனால், முழு குடும்பம் மற்றும் இரண்டு பீகார் இளைஞர்களையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதற்காக சஞ்சய் குமாரின் திட்டத்தின்படி, தனது மற்ற 3 நண்பர்களுடன் சேர்ந்து 9 பேரையும் கொலை செய்ய திட்டமிட்டு, குழந்தையின் பிறந்த நாள் விழாவில் குளிர்பானங்களில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளனர். அவர்கள் சிறிது நேரத்தில் மயக்கமடைந்ததால், அவர்களை கிணற்றில் தூக்கி வீசிவிட்டு தலைமறைவாகினர். போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். பிரேத பரிசோதனை அடிப்படையில், இவ்வழக்கு தற்கொலை வழக்கு இல்லை என்பது தெளிவாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கணவரைவிட்டு பிரிந்து பெற்ேறாருடன் இருக்கும் மக்சூத்தின் மகள் பூஸ்ரா மகனின் பிறந்தநாளை அனைவரும் கொண்டாடினர். சர்க்கரை பொங்கல் சமைத்து  சாப்பிட்டுள்ளனர். அப்போது, மயக்க மாத்திரைகளை குளிர்பானங்களில் கலக்கி கொலையான 9 பேருக்கும் குற்றவாளிகள் 4 பேரும் கொடுத்துள்ளனர்.


Tags : corpse recovery ,Telangana ,Telangana Well , Telangana, recovery of corpses in well, anesthetic pill, arrested
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...