×

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் சமூக இடைவெளி இல்லாமல் குவிந்த மக்கள்

வேலூர்: வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் விற்பனை நேரம் நீட்டித்துள்ள நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் குவிவதால் கொரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் செய்யும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் தினமும் இரவு 10 மணி முதல் காலை 9 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில்லறை விற்பனை கடைகள் அனுமதியின்றி இயங்குவதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் காய்கறிகள் வாங்குவதற்காக சமூக இடைவெளி இல்லாமல் குவிந்துவிடுகின்றனர்.

மேலும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் கூட அணிவதில்லை. இதனால் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் இரவு முழுவதும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சமூக இடைவெளி, முகக்கவசம் மற்றும் கை கழுவும் வசதி எதுவும் இல்லாததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, சென்னை கோயம்பேடு போன்று வேலூர் நேதாஜி மார்க்கெட் மாறிவிடாமல் இருக்க அதிகாரிகள் முன்கூட்டியே நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என்றனர்.

Tags : Vellore Netaji Market , Vellore, Netaji Market, People
× RELATED வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து...