×

ஊரடங்கை தளர்த்திய பிறகு கோயில் வழிபாட்டிற்கு தடை விலகுமா?: பழநியில் பரிதவிக்கும் வியாபாரிகள்

பழநி: ஊரடங்கை தளாத்தினாலும் வழிபாட்டு தலங்களுக்கு தடை நீட்டிக்க வாய்ப்புள்ளதால் பழநியில் வியாபாரிகள் பரிதவித்து நிற்கின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 1.25 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் பாதிப்பின் காரணமாக 4வது கட்டமாக ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனினும், பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு பெரும்பாலான இனங்கள் தளர்வு செய்யப்பட்டு விட்டன. ஆனால், சுமார் 60 நாட்கள் கடந்த நிலையிலும் கோயில் உள்ளிட்ட வழிபாட்டு கூடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதன் காரணமாக பக்தர்களின் வருகை நம்பி பிழைப்பு நடத்தி வரும் பழநி பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு சாதாரண நாட்களிலேயே சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் வந்து செல்வர். கார்த்திகை, விடுமுறை தினம் மற்றும் திருவிழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். இவ்வாறு வரும் பக்தர்களை நம்பி அடிவாரப்பகுதியில் சிறிதும், பெரிதுமாக 700க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தவிர, ஏராளமான அளவில் லாட்ஜ்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் உள்ளன.

சுமார் 2 ஆயிரத்து 500 குடும்பங்கள் இவற்றை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி உள்ளன. கோயில் திறக்கப்படாததால் கடந்த 60 நாட்களாக இத்தொழில்கள் 100 சதவீதம் முடங்கிப்போய் உள்ளது. நகர்பகுதிக்குள் கூட்டம் அலைமோதினாலும், அடிவார பகுதி கூட்டமின்றி வெறிச்சோடியே காணப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதே 95 சதவீதம் தொழில்கள் நடைபெற அரசு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் கோயில் போன்ற வழிபாட்டு தலங்களுக்கு தடை நீட்டிப்பு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பக்தர்களை நம்பியிருக்கும் சுமார் 2 ஆயிரத்து 500 குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து பழநி ஞானதண்டாயுதபாணி பக்தர் பேரவை நிர்வாகி செந்தில்ஜி கூறியதாவது, ‘பழநி அடிவார மக்களுக்கு கார்த்திகை மாதம் துவங்கி சித்திரை மாதம் வரையே சீசன் காலமாகும். எஞ்சிய காலம் பழநியில் கூட்டமிருக்காது. 6 மாத காலத்தில் சம்பாதித்த தொகையை வைத்துதான் வாழ்க்கை நடத்த வேண்டி இருக்கும். இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த 2 மாத காலம் முடங்கிப்போய் விட்டது. இந்நிலையில் வழிபாட்டு தலங்களுக்கு மேலும் தடையை நீட்டிக்க முடிவு செய்யக்கூடாது. தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறக்க காண்பித்த ஆர்வத்தை, கோயிலை திறக்கவும் காட்ட முன்வர வேண்டும். டாஸ்மாக் கடைக்கு செல்ல டோக்கன் முறையை அமல்படுத்தியதுபோல், தரிசனத்திற்கும் கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை விதித்து, அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி அனுமதிக்க வேண்டும்.குடிமகன்களுக்கு மதிப்பளித்த தமிழக அரசு, பக்தர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : curfew ,Merchants , Will temple worship,banned after, curfew, Merchants
× RELATED ஆண்டிப்பட்டியில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு