×

3 ரூபாய் கூலிக்கு வந்தேன் இன்று நடுத்தெருவில் நிற்கிறேன்: ஜெயேஷ் ப்ரதான், ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி

கடந்த  இரு ஆண்டுகளுக்கு முன்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிமாநிலங்களுக்கு சென்றாவது வேலை தேடிக்கொள்ளலாம் என்று எண்ணினேன். குடும்பத்தில் நான் பெரியவன் என்பதால் குடும்ப பொறுப்பை கவனிக்கும் நிலையிலும் இருந்தேன். எனது சகோதர, சகோதரிகள் படிப்பிற்காக சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையிலும் இருந்தேன. ஏற்கனவே எனது உறவினர்கள் சிலர் தமிழகத்தில் வேலை செய்து வருகின்றனர். மேலும் அவர்கள் குடும்பத்திற்கு மாதாமாதம் பணம் அனுப்பி வருகின்றனர். இதனால் நாமும் தமிழ்நாட்டிற்கு சென்றால் வேலை தேடி, பணம் சம்பாதிக்கலாம் என்று உறவினர் ஒருவர் மூலம் இங்கு வந்தேன். என்னுடன் மேலும் சில நண்பர்கள், உறவினர்கள் வந்தனர். அவர்கள் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வேலை செய்கின்றனர்.

கடந்த பல மாதங்களாக காண்ட்ராக்ட்டர் ஒருவர் மூலம் தூத்துக்குடி துறைமுகத்தின் அருகே உள்ள குடோன்களில் மூட்டைகள் சுமக்கும் பணியில் சேர்ந்தேன். தொடர்ந்து இங்கிருந்து மூட்டைகளை லாரிகளில் ஏற்றவும், லாரிகளில் வரும் பட்டாணி, பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவற்றை இறக்கி குடோனில் சேகரிக்கும் வேலை செய்து வந்தோம். ஒரு மூட்டை இறக்கினால் 2 ரூபாய் அல்லது 3 ரூபாய் என்ற அடிப்படையில் கூலி வழங்கப்படும். தினமும் 500 முதல் 700 வரையிலான மூட்டைகளை இறக்க முடியும். இதில் வரும் வருமானம் பெரும்பாலும் வீட்டிற்கு அனுப்பி வைத்து வருவதுடன் குறைந்த அளவில் சேமிக்கவும் செய்து வந்தேன்.  இந்நிலையில் கடந்த இருமாத காலமாக கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து பணிகளும் முடங்கின. எங்கள் குடோனில் சரக்குகள் ஏற்றி இறக்கும் பணியும் முடங்கியது.  இருக்க இடம் மட்டுமே உள்ள நிலையில் நாங்கள் அடுத்த வேளை உணவிற்கே திண்டாடும் நிலை உருவானது.

எங்களுடன் வந்த நபர்கள் 100க்கும் மேற்பட்டவருக்கும் இதே நிலைதான். எங்கள் நிலை குறித்து ஒப்பந்தகாரர்களுக்கு தெரிவித்தும் அவர்களாலும் போதிய சம்பளமோ அல்லது தினசரி உணவு வசதிகளோ கொடுக்க முடியவில்லை. ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்ததால் வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. இதனால் நாங்கள் இங்கிருந்து வேறு ஊருக்கு சென்று மாற்று வேலை தேடிக்கொள்ளவும் முடியவில்லை. இதனால் எங்கள் சொந்த ஊருக்கே செல்ல தீர்மானித்தோம். ஆனால் ரயில், பஸ் உள்ளிட்ட போக்குவரத்து எதுவும் இல்லாத நிலையில் அதிகமாக உள்ளூர் மொழியும் தெரியாத நிலையில் நாங்கள் எங்கு செல்வது யாரை கேட்பது என்று தெரியவில்லை.

 இதனால் அருகில் உள்ள காவல் நிலையங்கள் அரசு அலுவலகங்கள் என்று தஞ்சம் புகுந்தோம். அவர்கள் தற்காலிகமாக எங்களுக்கு ஏதாவது வழி செய்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தனர். ஊடகங்களில் எங்களை போன்ற வட இந்தியாவை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வது குறித்து தகவல்கள் தெரியவந்தது. இதனால் நாங்களும் அதிகம் படிக்காததால் அக்கம் பக்கம் எங்களுக்கு தெரிந்தவர்கள் உதவியுடன் இணையதளத்தில் பதிவு செய்து காத்திருக்கிறோம். இருப்பினும் நாட்கள் நகர்கிறதே தவிர எதுவும் நடக்கவில்லை.

எங்களுக்கு தற்போது கையிருப்பு எல்லாம் கரைந்த நிலையில் எந்த வாகனம் இயங்கினாலும் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அரசு மாவட்ட நிர்வாகம் எங்களை சொந்த செலவில் எங்களை போன்றவர்களை அனுப்ப காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது எங்களுக்கு ஊரடங்கு முடிந்து நிலைமை முன்போல் சீராகும் வரையில் உள்மாநில தொழிலாளர்களுக்கு வழங்குவதுபோல நிவாரண உதவி வழங்கவேண்டும். தமிழ்நாட்டுக்காக தான் உழைத்தோம்; எங்களுக்கும் நிவாரணம் தரலாமே. அரசு தான் கருணை காட்ட வேண்டும். ஒரு மூட்டை இறக்கினால் 2 ரூபாய் அல்லது 3 ரூபாய் என்ற அடிப்படையில் கூலி வழங்கப்படும். தினமும் 500 முதல் 700 வரையிலான மூட்டைகளை இறக்க முடியும்.

Tags : Jayesh Pradhan ,Odisha , Jayesh Pradhan, Odisha, laborer, corona, curfew
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை