×

சிக்கிம் மாநிலத்தை தனி நாடாக காட்டி டெல்லி அரசு வெளியிட்ட விளம்பரத்தால் சர்ச்சை

* பாஜ, காங்கிரஸ் கெஜ்ரிவாலுக்கு கடும் கண்டனம்
* பிழைக்கு பொறுப்பான அதிகாரி சஸ்பென்ட்

புதுடெல்லி: சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களை சேர்ப்பதற்காக டெல்லி அரசு வெளியிட்ட விளம்பரம் ஒன்றில், சிக்கிம் மாநிலத்தை தனிநாடு என்கிற பொருள்படும் வகையில் வாசகங்கள் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  பொதுவாகவே. நமது அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் போன்றவை தான் காஷ்மீரையும், அருணாச்சலப் பிரதேசத்தையும் தனிநாடு போன்ற வரைபடங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவார்கள். இந்தமுறை டெல்லி மாநில அரசு வெளியிட்ட விளம்பரம் ஒன்றில் சிக்கிம் மாநிலத்தை தனிநாடாக வகைப்படுத்தி வெளியிட்டது புதிய சர்ச்சைக்கு வழியை ஏற்படுத்தி உள்ளது.

சிவில் பாதுகாப்பு பணிக்காக தன்னார்வலர்களை சேர்ப்பதற்காக டெல்லி மாநில அரசு செய்தித்தாள்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில், விண்ணபிப்போரின் தகுதியை குறிப்பிடுகையில், இந்திய குடிமகன் அல்லது சிக்கிம் அல்லது பூட்டான் அல்லது நேபாளம் மற்றும் டெல்லியில் வசிப்பவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விளம்பரத்தை பிழையாக வெளியிட்டதற்கு பொறுப்பான அதிகாரியை உடனடியாக சஸ்பெண்ட் செய்து துணை நிலை ஆளநர் பைஜால் உத்தரவிட்டார்.

இதனிடையே, இந்த சர்ச்சைக்கு பதிலளித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,“சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இத்தகைய பிழைகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. விளம்பரம் திரும்பப் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். ஆனால், இந்த விவகாரத்தை கையிலெடுத்த மாநில பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்தனர். டெல்லி மாநில பாஜ தலைவர் மனோஜ் திவாரி இதுபற்றி காட்டமாக தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறுகையில், டெல்லி அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில், சிக்கிம் மாறநிலத்தை தனிநாடாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது. இந்திய மாநிலத்தை வேறொரு நாடாகக் காட்டும் அளவுக்கு ஒரு மாநில அரசு அறியாமையில் இருக்க முடியுமா? இந்த கடுமையான நடத்தைக்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு உரிய பதிலளிக்க வேண்டும் என்றார்.

இதபோல் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அனில் குமாரும் ஆம் ஆத்மி அரசை சாடினார். அனில் கூறுகையில், “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எப்போதும் விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே மிகவும் பிசியாக இருக்கிறார். அதனால் அவருக்கு சிக்கிம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிறதா என்பது கூட அவருக்குத் தெரியாது. எனினும், அவருக்கு நான் நினைவூட்டுகிறேன், சிக்கிம் இந்தியாவின் ஒரு பகுதிஎன்று ட்வீட் செய்துள்ளார்.

Tags : Delhi ,government ,state ,Sikkim , State of Sikkim, Individual State, Government of Delhi, Advertisement
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு