கோர்ட் அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க ஐகோர்ட்டில் இருக்கை அமைப்பில் மாற்றம்: தலைமை நீதிபதிக்கு வக்கீல் சங்கம் கோரிக்கை

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிமன்ற அறைகளில் வக்கீல்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கை அமைப்பு நெருக்கடி நிறைந்ததாக உள்ளது.

வக்கீக்கள் இருக்கைக்கும்  நீதிபதிகள் அமரும் இருக்கைக்கும் இடையே மிகப்பெரிய டேபிள் போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அரை முட்டை வடிவில் உள்ள இந்த டேபிள்களுக்கு இடையே பயன்படுத்த முடியாத வகையில் இடம் உள்ளது. இந்த இருக்கைகளில் இருந்து நீதிபதிகளை நேராக பார்த்து வாதிடுவது சிரமமாக உள்ளது.  

சென்னை உயர் நீதிமன்றம் தவிர உயர் நீதிமன்ற மதுரை கிளை உள்ளிட்ட அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களிலும் வக்கீல்கள் இருக்கை நீதிபதிகளை நேரடியாக பார்க்கும் வகையில் தனித்தனியாக போடப்பட்டுள்ளன.

இதனால் கூடுதல் எண்ணிக்கையில் வக்கீல்கள் அமர இடம் கிடைக்கும். சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் ஏதுவாக இருக்கும். எனவே, நீதிமன்ற அறைகளில் இருக்கை அமைப்பை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படாமலிருக்க வழக்குகளின் எண்ணிக்கை குறைத்து வழக்கு உள்ளவர்களை மட்டுமே நீதிமன்ற அறைகளுக்கு வரும் வகையில் கட்டுப்பாடு ஏற்பாடுகளை செய்தால் சமூக இடைவெளி பிரச்னை வராது. இந்த கோரிக்கைகளை நினைவேற்றி நீதிமன்றங்களிலேயே வழக்குகளை விசாரிக்க உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: