×

சென்னை மாநகராட்சி சார்பில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பள்ளிகளை தயார்செய்யும் பணி தீவிரம்: கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மாணவர்களுக்கு தனி அறை

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளிகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா  வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ஒட்டுமொத்தமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முக்கியம் என்பதால் அதை நடத்தியே தீருவோம் என்று முதல்வர் அறிவித்தார். அதே சமயம் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு மட்டும் வரும் ஜூன் 15ம் தேதி பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்காக பள்ளிகளை தயார் செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் 70 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுத உள்ளனர். கடந்தாண்டு 37 தேர்வு மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. சில பள்ளிகளில் கொரோனா சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு படுக்கைகள் போடப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ளது. எனவே அவற்றை அருகில் உள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்றிவிட்டு இந்த பள்ளிகளை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் விரைவில் முடிவடையும்.

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவை தினசரி மாறுபடும் என்பதால் இறுதிப் பட்டியல் தயார் செய்வதில் சிக்கல் உள்ளது. இவர்கள் அனைவருக்கும் உரிய பேருந்து வசதி செய்து தரப்படும் மேலும் இவர்கள் தேர்வு எழுத தனி அறை ஒதுக்கீடு செய்யப்படும் இவ்வாறு அவர் கூறினார்.Tags : Schools ,Class X Elections ,Elections ,Chennai Corporation , Madras Corporation, 10th Class General Elections, Schools, Students, Corona, Curfew
× RELATED ஊரடங்கால் மாதக்கணக்கில் பள்ளிகள்...