×

தென்மேற்கு பருவமழை ஜூனில் தொடக்கம்: அணைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு

* மராமத்து பணிகளை மேற்கொள்ள அறிவுரை
* நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் உத்தரவு

சென்னை: தென்மேற்கு பருவமழை ஜூனில் தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்தில் அணைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் மேட்டூர், பவானிசாகர், திருமூர்த்தி, பாபநாசம், பேச்சிபாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, முல்லை பெரியாறு, வைகை, மணிமுத்தாறு, சாத்தனூர், சோலையாறு, பரம்பிகுளம், ஆழியாறு உள்ளிட்ட 15 முக்கிய அணைகள் உள்ளன. இதன் மூலம் 198 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணைகள் தான் மாநிலத்தின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந் நிலையில் நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள உத்தரவில்,  ‘‘தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அணைகளின் மராமத்து பணிகளை மேற்ெகாள்ள வேண்டிய கட்டாயம். இந்த நிலையில், அணைகள் பலமாக இருக்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய அணைகள் பாதுகாப்பு இயக்கக தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த குழு, அணைகளில் மதகுகள், கரைகள் பலமாக இருக்கிறதா என்பதை நேரில் ஆய்வு செய்கிறது. இந்த மராமத்து பணிகளை மே 31ம் தேதிக்குள் முடித்து இருக்க வேண்டும். ஆற்றுப்படுகைகள், நீர்நிலைகள், வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் அதிக மழை பொழிவு இருந்த இடங்களை கண்காணிக்க வேண்டும்.

கொரோனா காலகட்டமாக இருந்தாலும், அணைகளின் பாதுகாப்பு நடவடிக்கை கருதி பணியாளர்களை சுழற்சி முறையில் நியமித்து இருக்க வேண்டும் என்று நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.



Tags : Southwest Monsoon, Dams, Tamil Nadu
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...