×

தமிழகத்தில் 15 முக்கிய அணைகளின் நீர்இருப்பு: 198 டிஎம்சியில் இருந்து94.7 டிஎம்சியாக சரிவு

* 6 அணைகளின் நீர் மட்டம் குறைந்தது
* அக்டோபர் வரை குடிநீர் விநியோகிப்பது கடினம்

சென்னை: தமிழகத்தில் குடிநீர், பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் அணைகளில் இருந்த 198 டிஎம்சி தண்ணீர் தற்ேபாது 94.7 டிஎம்சியாக குறைந்துள்ளது. இதனால், அக்டோபர் வரை குடிநீர் தேவையை சமாளிப்பது கடினம் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை, பவானி சாகர், பெரியாறு, வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், சோலையாறு, பரம்பிகுளம், ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 15 முக்கிய அணைகள் விளங்குகிறது. 198 டிஎம்சி கொள்ளளவு இந்த அணைகளில் நீர் இருப்பு என்பது வடகிழக்கு, தென்மேற்கு பருவமழையை நம்பித்தான் உள்ளது.

இந்த நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக மழை பெய்ததால் 15 அணைகளின் நீர் மட்டம் உயர்ந்தது. இதனால், நடப்பாண்டில் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு தண்ணீர் தட்டுபாடின்றி விநியோகிக்கப்பட்டது. குறிப்பாக, கடந்தாண்டில் ஜனவரியிலேயே குடிநீர் தட்டுபாடு ஏற்பட்ட நிலையில் நடப்பாண்டில் அந்த பிரச்னை இல்லாததால், தொடர்ந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம், பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.இந்நிலையில் தற்போது அணைகளில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது.  

குறிப்பாக, 4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் 0.4 டிஎம்சியும், 6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் 1.1 டிஎம்சியும், 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 0.6 டிஎம்சியும், 2.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 0.2 டிஎம்சியும், 5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையில் 0.6 டிஎம்சியும், 3.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையில் 0.6 டிஎம்சி என குறைந்துள்ளது. அதே நேரத்தில் 93.7 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 64.8 டிஎம்சியாகவும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையில் 15.5 டிஎம்சியும், 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 1.9 டிஎம்சியும், 4.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 2.2 டிஎம்சியும், 7.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையில் 1.3 டிஎம்சியும், 13.4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பரம்பிகுளம் அணையில் 3.2 டிஎம்சியும் 1.7 டிஎம்சி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையில் 0.6 டிஎம்சியாக உள்ளது.

தற்போது 198 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 அணைகளில் 94.7 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த பருவமழை சராசரி அளவு பெய்தால் மட்டுமே அடுத்து வரும் மாதங்களில் தமிழகத்தில் குடிநீர், பாசன தேவையை பூர்த்தி செய்ய முடியும். இல்லையெனில் அக்டோபர் மாதம் வரை குடிநீர் விநியோகத்தை ஒரே சீராக சமாளிப்பது கடினம்.

Tags : Tamil Nadu , Tamil Nadu, main dams, water reservoir
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...