×

சொத்து பிரச்னையில் ஏற்பட்ட மோதல்: வைகுண்டராஜன், 2 மகன் மீது தம்பி கொலை மிரட்டல் புகார்

நெல்லை:  நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கீரைக்காரன்தட்டை சேர்ந்த வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோருக்கு பல கோடி மதிப்பில் பூர்வீக சொத்துக்கள் உள்ளன. மேலும் பல கோடி ரூபாய் மதிப்பில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. இவர்களுக்கு இடையே சமீபகாலமாக சொத்துக்களையும், நிறுவனங்களையும் பிரிப்பதில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து நெல்லை எஸ்பி ஓம்பிரகாஷ் மீனாவிடம் தொழிலதிபர் ஜெகதீசன் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:  நானும், எனது சகோதரர் வைகுண்டராஜனும் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பல்வேறு நிறுவனங்களை புதிய கூட்டாண்மை ஒப்பந்தத்தின்படியும், கம்பெனி சட்டத்தின்படியும் நிறுவினோம். எங்கள் இருவருக்கும் பூர்வீக சொத்துக்களும் உள்ளன.

இதில் வைகுண்டராஜன் ஒரு பதிவு செய்யப்படாத கைத்தடி பாகப்பிரிவினை பத்திரத்தை அவருக்கு சாதகமாக உருவாக்கி அதை என்னிடம் கொடுத்து அதில் உடனே கையெழுத்திடுமாறு தெரிவித்தார். அது 300 பக்கங்களுக்கு மேல் இருந்ததால் உடனே முழுமையாக ஆவணத்தை பரிசீலிக்க இயலவில்லை. அதன் பேரில் பாகப்பிரிவினை ஆவணத்தின் நகலை படித்த போது அது மோசடியாகவும் சரியாகவும் பிரிக்கப்படவில்லை என தெரிய வந்தது.  நாங்கள் கூட்டாண்மை நிறுவனம், கம்பெனி சம்பந்தமாக உரிமம் பெற உறுதிமொழி ஆவணம் தயார் செய்யவும், வருமான வரித்துறை சம்பந்தமாக கடிதம் அளிக்கவும், நானும் என் குடும்பத்தினரும் நிரப்பப்படாத வெற்று தாள்களில் கையெழுத்து செய்து வைத்திருந்த தாள்களை கொண்டு எனது சகோதரர் பாகப்பிரிவினை பத்திரத்திலுள்ள பக்கங்களை மாற்றம் செய்து மோசடியாக தயாரித்துள்ளது தெரிய வந்தது.

மேலும் எனக்கும், எனது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர் என கூறியுள்ளார். இம்மனுவில் வைகுண்டராஜன், அவரது மகன்களான சுப்பிரமணியன், வேல்முருகன், உறவினர் கணேசன் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். மேலும் ஜெகதீசன், தூத்துக்குடி எஸ்பி அருண்பாலகோபாலனிடம் அளித்துள்ள புகார் மனுவில், எங்களது விவி ரைஸ்மில்லில் நானும் எனது மகன்களும் இருக்கும் போது, 150 அடியாட்கள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். இதுகுறித்து புகார் மனு ஏற்கனவே அளித்துள்ளேன்.

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலிலுள்ள விவி மரைன்ஸ் நிறுவனம், சாயர்புரம் விவி மரைன்ஸ் கோல்டு ஸ்டோரேஜ் நிறுவனத்தில் எனது சகோதரர் வைகுண்டராஜன், அவரது ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்து நிறுவனத்தை அபகரிக்க முயற்சித்துள்ளதாக புகார் அளித்துள்ளேன். எனது கீழ் இயங்கி வரும் நிறுவனங்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Vaikuntarajan ,Clash ,murder ,brother , Property dispute, Vaikuntarajan, 2 son, brother murder threatened
× RELATED நுங்கம்பாக்கம் செயல் வீரர்கள்...