×

மூன்று நாள் கடும் வாகன சோதனையில் மாஸ்க் அணியாமல் ெசன்ற 10,000 பேரிடம் 50 லட்சம் அபராதம் வசூலித்த போலீசார்

* சென்னை மாநகர  போலீஸ் கமிஷனர் தகவல்

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகரம் முழுவதும் கடந்த 3 நாளில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 10 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்து 50 லட்சம் அபராதமாக போலீசார் வசூலித்துள்ளதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் அதிகளவில் சென்னையில்தான் பரவி வருகிறது. நோய் தொற்று குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. சென்னையில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,989 ஆக உள்ளது.  

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆயுதப்படை காவலர்களுக்காக எழும்பூர் ராஜரத்தினம் மைதான நுழைவாயில் முன்பு தானியங்கி கைகழுவும் இயந்திரம் மாநகர காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று காலை திறந்து வைத்தார். அப்போது கமிஷனர் ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம், திரவ சுத்திகரிப்பான்கள் வழங்கினார்.  நிகழ்ச்சியில் மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் ஜெயராம், ஆயுதப்படை துணை கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகர காவல் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு சானிடைசர், கபசுர குடிநீர், முகக்கவசம் ஆகியவை தயாரித்து வழங்கப்படுகிறது. கொரோனா பாதுகாப்பு பணியை தற்போது தீவிரப்படுத்தியுள்ளோம். வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் மாநகர் முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் நான்கு சக்கரம் வாகனம், பைக்கில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து ₹500 அபராதம் விதிக்கப்பட்ட பிறகு, தற்போது வரை 10 ஆயிரம் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் நடைபெறும் குற்ற சம்பவங்களில் 50 சதவீதத்திற்கு கீழ் குற்றங்கள் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vehicle check, mask, 50 lakh fines, corona, police
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...