×

ராஜஸ்தானில் இக்கட்டான நேரத்தில் காரிலேயே பிரசவம் நடக்க உதவிய போலீஸ் அதிகாரி பெயரை குழந்தைக்கு சூட்டிய தாய்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இக்கட்டான நேரத்தில் காரிலேயே பிரசவம் நடக்க உதவிய பெண் போலீஸ் அதிகாரியின் பெயரையே தன் குழந்தைக்கு சூட்டி நன்றிக்கடன் செலுத்தியிருக்கிறார் தாய். ராஜஸ்தான் மாநிலம், பார்மர் பகுதியை சேர்ந்தவர் நைனு கன்வார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 4ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது சகோதரர் சாய்தன் சிங், தனது காரில் நைனுவை ஜோத்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பாதி வழியிலேயே கார் பழுதாகி நின்றுவிட, சாய்தன் செய்வதறியாது தவித்துள்ளார். நைனுக்கும் வலி அதிகமாகி உள்ளது.

அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் துணை கமிஷனர் ப்ரீத்தி சந்திரா, நைனுவை வேறொரு காரில் மாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை இருப்பதை உணர்ந்து, காரையே பிரசவ வார்டாக மாற்றினார். ஆண் காவலர்கள் சாமியானா பந்தல் துணியை நான்கு புறமும் பிடித்தபடி காரை மறைத்துக் கொள்ள, பெண் காவலர்கள் நைனுவை கவனித்துக் கொண்டனர்.  டாக்டரை அழைத்து வர சிலர் விரைந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களிலேயே காரிலேயே சுக பிரசவம் நடந்தது. நைனு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

பின்னர், தாயும், சேயும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இக்கட்டான தருணத்தில் தனக்கும், தனது குழந்தைக்கும் ஈடு செய்ய முடியாத உதவியை செய்த பெண் போலீஸ் அதிகாரிக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் அவரது பெயரையே நைனு, தனது குழந்தைக்கு சூட்டி உள்ளார். இது தனக்கு பெருமையாக இருப்பதாகவும், அந்த குழந்தைக்கு எப்போதும் தனது ஆசிர்வாதம் உண்டு என்றும் துணை கமிஷனர் ப்ரீத்தி சந்திரா கூறியுள்ளார்.

Tags : police officer ,Rajasthan , Rajasthan, childbirth, police, child, mother
× RELATED லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து...