×

நோய் தொற்றை எதிர்கொள்ள சுகாதார உள்கட்டமைப்பு வசதியை 2 மாதங்களில் மேம்படுத்துங்கள்

* தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: அடுத்த 2 மாதங்கள் கொரோனாவை எதிர்கொள்ள, சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும்படி தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 61 நாட்களான நிலையிலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 11 மாநகராட்சிகளில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் 70 சதவீத‍த்தினர் இந்த மாநகராட்சிகளில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறையின் கூடுதல் செயலாளர் ப்ரீத்தி சுதன் நேற்று கூறியதாவது:

இந்த குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள 11 மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட நகர்புற குடிசை பகுதிகள், குறைந்த பரப்பளவில் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர் முகாம்கள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். இப்பகுதிகளில் இறப்பு விகித‍த்தை குறைக்க பரிசோதனை முறைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டும்.  குறிப்பிட்ட 11 மாநகராட்சிகளில் குறுகிய கால இடைவெளியில் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. இப்பகுதிகளில் இறப்பு விகிதமும், புதிதாக நோய் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் தேசிய அளவிலானதை விட கூடுதலாக உள்ளது.

எனவே, இங்கு எந்தெந்த பகுதிகளில் நோய் தொற்று அதிகரிக்கிறது என்பது கண்டறியப்பட்டு அங்கு சோதனைகளை அதிகப்படுத்துதல், வீடு வீடாக சென்று கண்காணித்தல், தொற்று பரவுதலை அடையாளம் காணுதல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். இப்பகுதிகளில் சமூக இடைவெளி, கை கழுவுதல் உள்ளிட்ட அறிவுரைகள் பின்பற்றப்படுகின்றனவா என்று கண்காணிப்பில் இருக்க வேண்டும். நோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடியாக முறையாக சிகிச்சை அளிப்பதை இப்பகுதி மாநகராட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

இங்கு 24 மணி நேரமும் செயல்படும் நோய் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்க வேண்டும். அடுத்த 2 மாதங்களில் இப்பகுதிகளில் நோய் தொற்றை எதிர்கொள்ள, சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Disease, Health Infrastructure, Corona, Curfew
× RELATED இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு: அமெரிக்கா பரபரப்பு அறிக்கை