கயத்தாறில் ஊரடங்கு தடையால் பராமரிப்பின்றி கலை இழந்த கட்டபொம்மன் மணிமண்டப பூங்கா

கயத்தாறு: கயத்தாறில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் ஊரடங்கால் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடக்கிறது. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் பங்கு மகத்தானது. இறுதியில் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்ட கட்டபொம்மன் ஆங்கிலேய தளபதியின் ஆணைப்படி 1799 அக்டோபர் 16ம்தேதி கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார். அந்த இடத்தில் அவருக்கு 1970ம் ஆண்டு சிலை வைக்கப்பட்டது.

அதன்பின்னர் சிலை அருகே பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வடிவில் ரூ.1.20 கோடியில் மணிமண்டபம் கட்டப்பட்டு கடந்த 2015ம் ஆண்டு திறக்கப்பட்டது.

அதில் 7.25 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்தில் கட்டபொம்மனின் வெண்கலச்சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்கு கட்டபொம்மனுக்கு மூடிசூட்டுவது போன்றும், முயல் ஒன்று நாயை விரட்டிச் செல்வது போன்றும் இரண்டு சித்திரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அவரது வாழ்க்கையில் நடைபெற்ற வீரதீர செயல்களை விளக்கி மேலும் சித்திரங்கள் வைக்க வேண்டும். கட்டபொம்மன் பயன்படுத்திய பொருட்களை காட்சிக்கு வைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட அக்.16ம்தேதி ஏராளமான அமைப்பினரும், பொதுமக்களும் வந்து புகழஞ்சலி செலுத்துகின்றனர்.

மணிமண்டபத்தின் அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் வந்து பொழுதை போக்கினர். தற்போது ஊரடங்கால் கடந்த இரண்டு மாதங்களாக மணிமண்டபமும் அருகிலுள்ள பூங்காவும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் அதனை சீர்படுத்தி மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவது சிரமம். எனவே அரசு சிறப்பு கவனம் செலுத்தி பூங்கா மற்றும் மணிமண்டபத்துக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories:

>