×

ஜூன் இறுதி வரை திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் ரத்து; தமிழகத்தில் கோயில்கள் திறக்கும்போது தான் லட்டு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே, பொது இடங்களான வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதன்படி திருமலையிலும் ஏழுமலையான் தரிசனம் மே 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. எனவே, தேவஸ்தானம் மார்ச் 13 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்த ஆர்ஜித சேவைகள், விரைவு தரிசனம், வாடகை அறை உள்ளிட்டவற்றிற்கான கட்டணத்தை அவர்களின் வங்கி கணக்குகளுக்கு திருப்பி செலுத்தியது.

மேலும், தற்போது கொரோனா நோய்த் தொற்று காரணமாக 4 ஆம் கட்ட பொது முடக்கம் சில பல தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேவஸ்தானம் பக்தர்கள் முன்பதிவு செய்த சேவா டிக்கெட், வாடகை அறை, விரைவு தரிசனம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து பணத்தை பக்தர்களுக்கு திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை வாயிலாக ஆன்லைனில் வி.ஐ.பி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்களுக்கு மட்டும் ரத்து செய்து கொள்ளும் வாய்ப்பில்லை. எனவே, அவர்களுக்கு மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும்போது பக்தர்கள் விரும்பும் தேதியில் ஏழுமலையான் பிரேக் தரிசனம் அளிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோயில்கள் திறக்கும்போது தான் லட்டு

கோயில்கள் திறக்கப்படும்போது தான் சலுகை விலை திருப்பதி லட்டு தமிழகத்தில் கிடைக்கும் என தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் லட்டு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் தினசரி சென்னை தி. நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நேரரில் வந்து அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் விசாரித்துவிட்டு செல்வதாகவும், ஆனால் தற்போது தமிழகத்தில் இதுவரை லட்டு விற்பனைக்கு வரவில்லை என்றும் இங்கு கோவில்கள் எப்போது திறக்கப்படுமோ அப்போதுதான் சலுகை விலை லட்டுகள் கிடைக்கும் எனவும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Tirupati Ezhumalayan Darshan ,temples ,announcement ,Tamilnadu Latu ,Devasthanam ,Tirupati Ezumalayan Darshan , June, Tirupati, Ezumalayan, Darshan ticket, Devasthanam announcement
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...