×

தென்னை மட்டை கிடைக்காமல் கயிறு தயாரிக்கும் நிறுவனங்கள் திண்டாட்டம்

கம்பம்: தென்னை மட்டைகள் தட்டுப்பாட்டால் கம்பம் பகுதியில் தென்னை நார் கயிறு தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். தேனி மாவட்டம் கம்பம், பாளையம், கோம்பை ஆகிய ஊர்களில் தென்னை மட்டையிலிருந்து கயிறு தயாரிக்கும் மில்கள் அதிகளவில் உள்ளன. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இப்பகுதிகளில் தயாராகும் கயிறுகள் கேரளா மற்றும் வெளிமாநிலங்களுக்கும், கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கம்பம் பள்ளத்தாக்கில் அதிகளவில் தென்னை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தென்னை மரத்திலிருந்து இறக்கப்படும் தேங்காய்களிலிருந்து பிரிக்கப்படும் உரி மட்டைகள் இப்பகுதியில் உள்ள கயிறு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்குவரத்து தடைபட்டதால் விளைபொருட்களை வெளியூர்களுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொள்ளாச்சி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தென்னை மரங்கள் பராமரிப்பதில் போதிய அக்கரை காட்டவில்லை.

இப்பகுதிகளை சேர்ந்த கயிறு மில் உரிமையாளர்கள் கம்பம், பாளையம் ஆகிய பகுதிகளுக்கு வந்து, தென்னை உரி மட்டைகளை அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் தேங்காய் மட்டைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிகிளல் உள்ள கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைகள் இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கயிறு மில் தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், ‘‘உரி மட்டை தட்டுப்பாடு காரணமாக, இப்பகுதிகளில் உள்ள கயிறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வறட்சி உள்ளிட்ட பிரச்னைகளால் ஏற்கனவே கயிறு தயாரிக்கும் தொழில் அழியும் நிலையில் உள்ளது. எனவே இந்த பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வெளி மாவட்டங்களுக்கு தென்னை மட்டைகளை அனுப்புவதை தடை செய்ய வேண்டும். இப்பகுதிகளில் உள்ள தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நலிவடையாமல் பாதுகாக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : companies , Coconut shell and rope making companies
× RELATED அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி...