×

சீனாவுடனான வர்த்தகத்தை எளிதாக்க 12 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லையில் உள்ள சாலை திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது நேபாள அரசு

காத்மாண்டு: இந்தியாவுடனான பதற்றத்திற்கு இடையே சீனாவுடனான வர்த்தகத்தை எளிதாக்க 12 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லையில் உள்ள சாலை திட்டத்தை நேபாள அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. நேபாள-சீனா எல்லை வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக 2008 ஆம் ஆண்டு டர்ச்சுலா-டிங்கர் சாலை திட்டத்தின் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கடுமையான நிலப்பரப்பு மற்றும் கடுமையான வானிலை காரணமாக அரசால் அந்த திட்டத்தை முடிக்க முடியவில்லை. இந்நிலையில் டர்ச்சுலா மாவட்டத்தில் 130 கி.மீ நீளமுள்ள டர்ச்சுலா-டிங்கர் சாலை திட்டத்தின் பணிகளை நேபாள அரசு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்திற்காக சுமார் 50 கி.மீ. சாலை உத்தரகண்ட் மாநிலத்தின் இந்திய எல்லைக்கு இணையாக இயங்குகிறது. மற்றும் சாலையின் மீதமுள்ள பகுதியை முடிக்க நேபாள அரசாங்கம் தனது ராணுவத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலைத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கான முக்கிய காரணம் புலம்பெயர்ந்த கிராமங்களாக இருக்கும் டிங்கர் மற்றும் சாங்ரு மக்களை இடம்பெயர்ப்பதாக கூறப்படுகிறது. மேலும் மீதமுள்ள 87 கி.மீ பாதையை முடிக்க நேபாள ராணுவம் கட்டியாபாகரில் ஒரு முகாமை அமைத்து வருகிறது.

இந்தச் சாலை வர்த்தகத்தை மட்டுமல்ல, சுற்றுலாவையும் ஊக்குவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு லிபுலேக் பாஸ் மூலம் வர்த்தகம் தொடர்பான இந்தியா-சீனா ஒப்பந்தத்தை நேபாளம் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே  இந்தியா - சீனா இடையே வரையறுக்கப்படாத எல்லை பிரச்னை கடந்த 1962ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. இதேபோல், இந்தியா-நேபாளம் இடையேயான எல்லை பிரச்னையும் பல ஆண்டாக தீர்க்கப்படாமலேயே உள்ளது. காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அப்பகுதிகள் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்திய அரசு தெரிவித்து வருகிறது.

அப்பகுதிகள் நேபாளத்தின் தார்சுலா மாவட்டத்தை சோ்ந்தவை என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது. எனவே, இவை சர்ச்சைக்குரிய பகுதிகளாகவே இருந்து வருகின்றன. இந்தச் சூழலில், காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா பகுதிகளை இணைத்து நாட்டின் புதிய அதிகாரப்பூர்வ வரைபடத்தை நேபாளம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா மட்டுமின்றி உபி.யின் கோரக்பூர் அருகே உள்ள சாஸ்தா உள்ளிட்ட பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.இது இந்தியா, நேபாளம் இடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்பகுதிகளுக்கு நேபாளம் திடீரென சொந்தம் கொண்டாட காரணம், திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு யாத்ரீகர்கள் பயணம் செய்வதற்கான நேரத்தை குறைக்கும் வகையில், லிபுலேக் கணவாய் வழியாக இந்திய அரசு சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைதான். இந்த சாலை சமீபத்தில் திறக்கப்பட்டது. இதற்கு நேபாள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதன் எதிரொலியாகத்தான் புதிய வரைபடம் வெளியிட்டு நேபாள அரசு, இந்தியாவை எரிச்சலடைய வைத்துள்ளது. ஆனாலும், இந்த விவகாரத்தில் சீனாவின் கைங்கர்யம் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய, சீன படைகள் சமீபத்தில் லடாக்கில் பங்கோங் ஏரிக்கு அருகே மே 5ம் தேதியும்,

பின்னர் வடக்கு சிக்கிமில் மே 8ம் தேதியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அந்த சம்பவங்களில் இரு தரப்பிலும் பல வீரர்கள் காயமடைந்தனர், இது, 2017ம் ஆண்டில் டோக்லாமில் 73 நாள் மோதலுக்குப் பின்னர் நடந்த முதல் மோதலாகும். இதன் பிறகுதான் நேபாளம், இந்தியாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. எனவே, நேபாளம் சீனா பக்கம் சாய்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். நேபாளம் மீது ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் இந்தியாவை கட்டுப்படுத்த சீனா நினைக்கிறது. அதோடு நேபாளத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதுகிறது. இந்தியாவை இதன் மூலம் வீழ்த்த நினைக்கிறது.

ஏற்கனவே, கொரோனா காரணமாக சீனாவுக்கு உலக நாடுகளிடம் இருந்து அதிக அழுத்தம் வருகிறது. சீனாவிடம் விசாரிக்க இந்தியாவும் ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில், நேபாளம் மூலம் பிரச்னை உருவாகி உள்ளது. இது நேபாள அரசின் முட்டாள்தனமான முடிவு என்றும், இதை இந்திய அரசுடன் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னை என்றும் அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Government of Nepal ,China , China, Road Project, Government of Nepal
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...