×

ஒரு வாரத்திற்கு பிறகு தெளிந்தது இயல்பு நிறத்தில் தாமிரபரணி தண்ணீர்

வி.கே.புரம்: ஒரு வாரத்திற்கு பிறகு தாமிரபரணி தண்ணீர் செந்நிறத்தில் இருந்து தெளிந்து மீண்டும் இயல்பு நிறத்திற்கு திரும்பியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்வது தாமிரபரணி ஆறு. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி, மேற்குத்தொடர்ச்சி மலையில் பூங்குளம் தொடங்கி புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கழிவுகளும், குப்பைகளும் கலப்பது அதிகரித்துள்ளதால், தாமிரபரணி நதி மாசடைந்து வருகிறது. கடந்த 16ம் தேதி முதல் தாமிரபரணி ஆற்றின் தண்ணீர், தனது வழக்கமான நிறத்தில் இருந்து செந்நிறத்திற்கு மாறியது. குறிப்பாக பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கலங்கலாகவே காட்சியளித்தது. அணையில் திறந்து விடப்படுவது முதல் கடலில் கலப்பது வரை செந்நிறமாகவே ஓடியது. பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் சுத்திரிகரிக்கப்பட்ட தண்ணீரும் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டதால் அதனை குடிக்கவே பொதுமக்கள் அஞ்சினர். இதையடுத்து வி.கே.புரத்தை அடுத்த சிவந்திபுரம் உள்ளிட்ட சில கிராமங்களில் அரசு சார்பில் தண்டோரா மூலம் தண்ணீரை காய்ச்சி குடிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் தாமிரபரணி ஆற்றில் குளித்தவர்களுக்கும் உடலில் அரிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் ஏற்பட்ட பரபரப்பை அடுத்து அதிகாரிகள் குழுவினர், பாபநாசம் அணையை பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். மாதிரி தண்ணீரை சேகரித்து பரிசோதனைக்கும் அனுப்பினர். இதுகுறித்து பாபநாசம் அணை செயற்பொறியாளர் வெங்கடாசலம் கூறுகையில், ‘‘அணையின் அடிப்பகுதியில் உள்ள சேறும், சகதியும் தண்ணீரில் கலப்பதால் நிறம் மாறியதாகவும், ஓரிரு நாட்களில் தானாகவே தண்ணீர் தெளிந்துவிடும், என்றார். இதே கருத்தை தெரிவித்த கலெக்டர் ஷில்பா, ‘‘செந்நிறமாக மாறிய தாமிரபரணி தண்ணீரை குடிப்பதால் உடல் நலத்திற்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. ஓரிரு  நாளில் தண்ணீர் தெளிந்துவிடும். இதனால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை’’ என்றார்.

இவ்விவகாரம் தொடர்பாக எம்பவர் சுற்றுசூழல் அமைப்பின் இயக்குநர் சங்கர், மாநில மனித உரிமை ஆணையத்திற்கு படங்களுடன் புகார் அனுப்பியிருந்தார். இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட ஆணையம், இதுதொடர்பாக நெல்லை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், தமிழக பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் நேற்று முன்தினம் அம்பை தாசில்தார் கந்தப்பன் தலைமையில்     பொதுப்பணித்துறை பொறியாளர் மகேஸ்வரன், நகராட்சி ஆணையாளர்கள் (வி.கே.புரம்) காஞ்சனா, (அம்பை) ஜின்னா, வி.கே.புரம்  பணி மேற்பார்வையாளர் சரவணன் உள்ளிட்டோர் பாபநாசம் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே அணையில் இருந்து வெளி வரும் தண்ணீரின் நிறம் மாறத் துவங்கியுள்ளது. இதன் காரணமாக பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றில் தெளிந்த நீரோடையாக தண்ணீர் ஓடுகிறது. அப்பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரும் கலங்கலின்றி பழைய நிறத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : After,week,copper-colored water , clear
× RELATED மார்த்தாண்டத்தில் சாலையில் ஓடும் அணை...