×

ஊரடங்கால் ஏற்பட்ட கடும் நெருக்கடியிலும் வடமாநில தொழிலாளர்களுக்கு வேலை தரும் கோழிப்பண்ணைகள்

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகள், ஊரடங்கால் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியிலும் வடமாநில தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகின்றன. நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்குள்ள கோழிப்பண்ணைகளில் சுமார் 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. தினசரி 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது. இந்த முட்டைகள் தமிழகம் மற்றும் கேரளாவில் 70 சதவீதம் விற்பனையாகிறது. மீதமுள்ள முட்டைகள், தமிழக அரசின் சத்துணவுத் திட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 மாதமாக நீடித்து வரும் கொரோனா ஊரடங்கு, நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணை தொழிலில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கொரோனா பீதியால் முட்டை விலை தமிழகம் மற்றும் கேரளாவில் கடுமையாக சரிந்தது.

 தமிழகத்தில் கொரோனாவால் ஊரடங்கு தொடங்கிய பிறகு, முட்டைகளை வெளியிடங்களுக்கு அனுப்ப முடியாத அளவிற்கு, போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து கோழித்தீவனம் கொண்டு வருவதும் தடைபட்டது. இப்படி பல்வேறு நெருக்கடிகள் கோழிப்பண்ணை தொழிலை தொடர்ந்து பாதித்து வருகிறது. இங்குள்ள கோழிப்பண்ணைகளில் பீகார், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், சுமார் 10 ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறார்கள். கோழித்தீவனம் தயாரிக்கும் ஆலைகள் மற்றும் பண்ணைகளில் அவர்கள் தங்கியிருந்து வேலை செய்கிறார்கள். பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள், வேலையிழப்பால் தங்களது சொந்த மாநிலத்துக்கு செல்லும் நிலையில், கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு, தொடர்ந்து வேலைவாய்ப்பு இருப்பதால், இங்கேயே தங்கியிருக்கிறார்கள். கடும் நெருக்கடியான நிலையிலும், இவர்களுக்கு நாமக்கல் கோழிப்பண்ணைகள் கைகொடுத்துள்ளது.
இதுகுறித்து கோழிப்பண்ணையாளர் செல்வராஜ் கூறியதாவது:

 நாமக்கல் பகுதியில் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் கோழிகள் வரை வைத்துள்ள சிறிய, பெரிய பண்ணையாளர்கள் இருக்கிறார்கள். பண்ணைகளில் உள்ள கோழித்தீவனம் தயாரிப்பு ஆலைகளில், குறைந்தபட்சம் 7 பேர் முதல் 25 பேர் வரை தங்கியிருந்து வேலை செய்கிறார்கள். வாரம் ஒரு முறை சம்பளம் கொடுத்து வருகிறோம். தங்குமிடம் இலவசமாக தரப்படுகிறது. தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைப்பதால், இங்கேயே தங்கி வேலை செய்கிறார்கள். கோழிப்பண்ணையில் முட்டை வாங்கினால் கூட, அதற்கும் சம்பளத்தில் இருந்து காசு கொடுத்து விடுவார்கள்.  மற்ற தொழில் நிறுவனங்களில் வேலை செய்த வடமாநில தொழிலாளர்கள், வேலையிழந்துள்ளதால், சொந்த மாநிலம் செல்கிறார்கள். ஆனால், கோழிப்பண்ணையாளர்கள் நஷ்டத்தை சந்தித்தாலும், கோழிப்பண்ணை தொழிலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் வடமாநில இளைஞர்கள் பண்ணைகளில் வேலை செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கோழிப்பண்ணைகளில் முட்டை எடுத்தல், கோழிகளுக்கு தீவனம் அளித்தல், முட்டைகளை லாரிகளில் ஏற்றுதல் போன்ற வேலைகளுக்கு உள்ளூரை சேர்ந்த பெண்கள், ஆண்கள் அதிக அளவில் வருகிறார்கள். கோழிப்பண்ணை தொழில் ஊரடங்கு உத்தரவால், விற்பனை பாதிப்பு, தீவன மூலப்பொருட்கள் விலையேற்றம் போன்ற பாதிப்புகளை சந்தித்தாலும், வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை என்ற நிலை இன்னும் ஏற்படவில்லை.

Tags : Poultry farms ,Northern Territory , Poultry farms ,Northern Territory workers , face of curfew
× RELATED புரட்டாசி முடிந்ததால் முட்டை விலை...