×

ஜோலார்பேட்டையில் நவீன தொழில் நுட்ப சிக்னல் திறப்பு பெங்களூரு, கோவை செல்ல 20 நிமிடம் பயண நேரம் குறைவு: ரயில்வே அதிகாரிகள் தகவல்

ஜோலார்பேட்டை:  ஜோலார்பேட்டையில் நவீன தொழில் நுட்ப சிக்னல் திறப்பு விழாவில் சென்னையில் இருந்து பெங்களூரு, கோவை செல்ல 20 நிமிடங்கள் குறைகிறது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் யார்டு சீரமைப்பு பணிகள் நிறைவு மற்றும் புதிய நவீன மயமாக்கப்பட்ட சிக்னல் பிரிவு திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவிற்கு சென்னை முதன்மை ரயில்வே சிக்னல் தொலை தொடர்பு துறை அதிகாரி பாஸ்கரன்   தலைமை தாங்கி புதிய நவீன மயமாக்கப்பட்ட சிக்னல் பிரிவை திறந்து வைத்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலைய மேலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். தென்னக ரயில்வே பொது மேலாளர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் யார்டு மறு சீரமைப்பு பணிகளை ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டனர். அதன் பிறகு நடைபெற்ற பணிகள் குறித்தும் அதன் பயன்களையும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 ஜோலார்பேட்டை சந்திப்பு ரயில் நிலையம்  தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவின் கீழ் ஒரு பெரிய ரயில் நிலையமாக விளங்குகிறது. தினமும் 190க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளை தினசரி கையாளுகிறது. பயணிகள் ரயில் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில்  தெற்கு ரெயில்வே ஊரடங்கு உத்தரவின் போதும் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த  காலகட்டத்தில் எடுக்கப்பட்ட சுமார் 9 கிமீ நீளமுள்ள  ஜோலார்பேட்டை யார்டு  மேம்படுத்துவது ரயில் நடவடிக்கைகளின் மேம்பட்ட வேகத்திற்கும், பாதுகாப்பிற்கும் வழிவகுத்துள்ளது. இந்த முக்கிய யார்டு மாற்றியமைக்கும்  பணி கடந்த   14ம் தேதி தொடங்கி கடந்த 21ம் தேதி  நிறைவடைந்தது.

 இது  ரயில் நடவடிக்கைகளின் வேகத்தை மேம்படுத்தும். தற்போதுள்ள 15 கிமீ வேகத்தில் நிரந்தர வேக கட்டுப்பாடு முற்றிலும் தளர்த்தப்பட்டு ரயில்களை இப்போது இயக்க முடியும். எந்த  வேக கட்டுப்பாடும்  இல்லாமல் 110 கிமீ வேகத்தில் ஜோலார்பேட்டை வழியாக செல்லும் ரயில்களின் பயண நேரத்தை கணிசமாக குறைக்கும். இது சென்னையில் இருந்து பெங்களூரு, கோயம்புத்தூர் செல்ல   20 நிமிடங்களை சேமிக்கிறது. மீண்டும்  பெங்களுரூ  கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு வர 20 நிமிடங்கள் சேமிக்கிறது. இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Coimbatore ,Goa ,Bangalore , 20-minute ,journey time , Bangalore, Coimbatore
× RELATED கொரோனா பரிசோதனையில் முறைகேடு:...