×

கொரோனா சூறை காற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பனை தொழிலாளர் குடும்பங்கள்

* பதனீர்,நுங்கு விற்பனை பாதிப்பு
* நிவாரணத்திற்கு காத்திருப்பு

சாயல்குடி: சூறை காற்று, நுங்கு விளைச்சலால் பதனீர் உற்பத்தி குறைந்து கருப்பட்டி உற்பத்தி பாதிப்பு, கொரோனாவால் நுங்கு கூட விற்க முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 15 லட்சத்திற்கு அதிகமான பனை மரங்கள் உள்ளன. சுமார் 2 லட்சம் குடும்பங்கள் பனை மரம் மற்றும் பனைமர உப தொழில் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் சாயல்குடி, திருப்புல்லானி, மண்டபம், ராமேஸ்வரம், தொண்டி ஆகிய கடற்கரை சார்ந்த பகுதிகளில் அதிகமாக இத்தொழில் நடந்து வருகிறது. பனை ஓலை முதல் மரத்தின் வேர் பகுதி வரை பயனுள்ளதாக இருப்பது பனை மரத்தின் தனிச்சிறப்பு. இதனால் பூலோகத்தின் கற்பகதரு என அழைக்கப்படுகிறது. கடந்த காலங்களில் நன்றாக பருவ மழை பெய்து, நெல் அறுவடை செய்யும் தை, மாசி மாதங்களில் கருப்பட்டி உற்பத்திக்காக பனை மரத்தின் பதனீர்காக பாளை வெட்ட துவங்குவது வழக்கம்.

ஆனால் கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட தொடர் வறட்சியின் காரணமாக பனை மரங்கள் பட்டுபோனது. இதனால் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் மரக்கடை பயன்பாடு, காளவாசல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்காக வெட்டப்பட்டு விட்டது. இந்தநிலையில் கடந்தாண்டு வழக்கத்தை விட அதிமாக பருவமழை பெய்தது.
பனைமரத்தை பொறுத் தவரை நல்ல மழை பெய்தாலும் கூட, மறுவருடம் தான் நல்ல பயன் கிடைக்கும் என்கின்றனர். இருந்த போதிலும் கடந்த பிப்ரவரி இரண்டாவது வாரம் முதல் தொழிலாளர்கள் பாளை சீவுதல், மண்கலையம் கட்டுதல், பதனீர் இறக்குதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். பாளை உற்பத்தி குறைந்து பதனீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் நுங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் பதனீர் இறக்க போதிய பானை கிடைக்காமல் கருப்பட்டி உற்பத்தி குறைந்துள்ளது.
மேலும் தற்போது சூறை காற்று பலமாக வீசி வருவதால் பனை ஏறி பதனீர் முட்டிகளை கட்ட முடியவில்லை.

கட்டப்படும் முட்டிகளும் காற்றிற்கு விழுந்து உடைந்து விடுகிறது. இந்த மாதங்களில் நுங்கு, பனங்காய் போன்றவை விற்பனை ஆவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் நுங்கு கூட விற்பனை ஆக வில்லை. இதனால் நுங்கு பனங்காய், பழமாக மாறி வீணாகி வருகிறது. இதனால் போதிய வருமானம் இன்றி கொரோனா சமயத்தில் வாழ்வாதாராம் இழந்து கஷ்டப்படுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். பனைமரத் தொழிலாளிகள் கூறும்போது, ஆண்டு தோறும் தை மாதம் சீசன் துவங்கும். கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட தொடர் வறட்சியால் பங்குனி, சித்திரை என காலம் கடந்து சீசன் துவங்கியது. கடந்தாண்டு நல்ல மழை பெய்தும் கூட, அவை இந்தாண்டிற்கு பயன்படவில்லை. கடந்த கால வறட்சி தன்மை இருப்பதால் பதனீர் உற்பத்தி குறைந்து விட்டது. சுமார் 20 லிட்டர் பதனீருக்கு வெறும் 2 கிலோ கருப்பட்டி மட்டுமே தயாரிக்க முடிகிறது.

மேலும் தற்போது நுங்கு அதிகமாக விளைந்துள்ளது. இதனால் பதனீர் உற்பத்தி முற்றிலும் குறைந்து விட்டது. கடந்த 3 மாதங்களாக கொரோனா ஊரடங்கு இருப்பதால் நுங்குகளை வெட்டிச் சென்று வெளி சந்தைகளில் விற்க முடியவில்லை. இதனால் நுங்கு மரத்திலேயே காய்த்து, பனம் பழமாக மாறி கீழே விழுந்து வீணாகி வருகிறது. தற்போது சூறை காற்று பலமாக வீசி வருவதால் பனை மரம் ஏறி தொழில் செய்ய முடியவில்லை. கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில் வாரியத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் ஒருமுறை ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் தொழில்வாரிய உறுப்பினர்களாக இல்லை. முதலாளிகளை நம்பியே காட்டு பகுதியில் குடிசை அமைத்து சீசன் தொழில் செய்கிறோம். எனவே வருவாய்துறை மூலம் கணக்கெடுத்து தொழில்வாரிய உறுப்பினர்களாக உடனடியாக சேர்க்க வேண்டும். கொரோனா உதவி தொகை, தொழில் முடக்க ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் நிவாரணம், உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என்றனர்.

Tags : palm worker families ,Families , Families,palm worker families, livelihood , corona winds
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....