×

ஊரடங்கால் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்: வேலை இழக்கும் கைடுகள், ஓட்டல் பணியாளர்கள்

காரைக்குடி: ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால் சுற்றுலா தலங்களில் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பயணிகள் வருகை இல்லாததால் ஓட்டல் மற்றும் கைடுகள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு தொழில்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தினசரி சம்பளம் பெறும் தொழிலாளர்கள் வருமானத்துக்கு வழியின்றி குடும்பம் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை காரைக்குடி அருகே கானாடுகாத்தான் செட்டிநாடு பராம்பரிய பங்களாக்கள், ஆத்தங்குடி, நேம்மம், குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, இளையாங்குடி, காளையார்கோவில், தேவகோட்டை, திருமலை, பிரான்மலை என 30க்கும் மேற்பட்ட சுற்றுலாதலங்கள் உள்ளன. இந்த சுற்றுலாதலங்களை பார்வையிட ஆண்டுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு 10 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டப்படுகிறது.

 நேரடியாவும், மறைமுகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுவந்தனர். செட்டிநாடு பாரம்பரிய பங்களாக்களை பார்வையிட ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா, ஜெர்மன் ஆகிய நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அதிகளவில் வருவார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நம்பி இப்பகுதியில் 7க்கும் மேற்பட்ட நட்சத்திர அந்தஸ்து பெற்ற பாரம்பரிய ஓட்டல்கள் செயல்படுகின்றன. தவிர ஓட்டல்கள், அரசு மூலம் பயிற்சி பெற்ற 100க்கும் மேற்பட்ட கைடுகள், 200க்கும் மேற்பட்ட ஓட்டல் பணியாளர்கள் உள்ளன. ஊரடங்கு காரணமாக அனைத்து தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளதால் நிர்வாகம் ஆட்குறைவு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. சில தங்கும் விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டு பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். பயணிகள் வருகை இல்லாததால் கைடுகள் வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கானாடுகாத்தான் செட்டிநாடுமேன்சன் சந்திரமவுலி கூறுகையில், சுற்றுலாதுறையை நம்பி இந்தியாவில் 6 கோடி பேர் உள்ளனர். இத்துறையின் மூலம் 17 லட்சம் கோடி வரை வருமானம் ஈட்டப்படுகிறது என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. ஊரடங்கால் சுற்றுலா துறை முடங்கியதால் அரசுக்கு பெரும் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியை பொறுத்தவரை ஆண்டுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் வருவார்கள். தவிர பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் இருந்து உள்நாட்டு பயணிகள் அதிகளவில் தற்போது வருகின்றனர். வெளிநாட்டு பயணிகளை பொறுத்தவரை இங்குள்ள சீதோனநிலை, கலாச்சாரம், கட்டிடக்கலை போன்றவற்றை தெரிந்து கொள்ள வருவார்கள். தவிர செட்டிநாட்டு உணவுக்கு என அதிகளவில் வருவார்கள். வெளிநாட்டு பயணிகள் வருகை முற்றிலும் தடைபட்டதால் பலகோடி வரை வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. தவிர வியாபாரிகள், ஓட்டல் பணியாளர்கள், கைடுகள்,  சலவை தொழிலாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 தவிர வெளிநாட்டு பயணிகள் வர இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும். இந்நிலை தொடர்ந்தால் தாக்குபிடிக்க முடியுமா என தெரியவில்லை. பலநிறுவனங்கள் பணியாளர்களை பாதியாக குறைத்துவிட்டது என்றார்.

Tags : tourist destinations ,hotel workers , Surfing tourist, destinations,job loss guides, hotel workers
× RELATED தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்ல தடை