×

ரூ.10க்கு கூவி கூவி விற்றும் பயனில்லை முககவசம் அணியாமல் சுற்றித்திரியும் இளைஞர்கள்: போலீசார் கண்டிப்பு தேவை

நாமக்கல்: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்,  நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் சாலைகளில் நடந்தும், டூவீலர்களில்  சுற்றித்திரியும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போலீசார் கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு  முழுவதுமாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மே 31ம் தேதி வரை ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததை அடுத்து பொது  போக்குவரத்து தவிர, மற்ற வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கல்வி  நிறுவனங்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள், கோயில்கள் தவிர,  தொழிற்சாலைகள், வர்த்தக கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு  வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கைகளை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி  கழுவ வேண்டும்.பொதுமக்கள் முககவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என  அறிவுறுத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு  ₹100 அபராதம் விதிக்க கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். நகராட்சி  அதிகாரிகள், போலீசார் வாகன சோதனையின் போது முககவசம் அணியாமல் வருபவர்களை  பிடித்து ₹100 அபராதம் விதித்து வருகின்றனர். விதிமுறை மீறி தேவையின்றி  சாலையில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குபதிவு செய்வதுடன், வாகனங்களை  போலீசார் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தும் வருகின்றனர்.முககவசம்  அணிந்து வந்தால் மட்டுமே பங்க்குகளில் வானங்களுக்கு பெட்ரோல், கடைகளில்  மளிகை பொருட்கள், காய்கறிகள் விற்பனை என ஆரம்பத்தில் கட்டுப்படுத்தினர்.  ஆனால் நாளடைவில் அது கண்துடைப்பாக மாறிப்போனது.

ஊரடங்கு  தளர்த்தப்பட்டதால் சாலைகளில் மக்கள் நடமாட்டும் அதிகரித்துள்ளது. வர்த்தக  கடைகள், சிறு குறு தொழிற்சாலைகள், கடைகளில் மக்கள் பணியாற்றி வருகின்றனர்.  பொதுமக்கள் வெளியே வரத்துவங்கியதால் அவர்களின் பயன்பாட்டுக்கு பல  வண்ணங்கள், பல வடிவங்களில் முககவசங்கள், கையுறைகள் ஆகியவை மெடிக்கல்  மட்டுமின்றி சாலையோரங்களில் கடைபோட்டு சிலர் விற்பனை செய்கின்றனர். இங்கு  முககவசம் ₹10 விலையிலும், கையுறைகள் ₹20 முதல் ₹70 வரையிலும் விற்பனை  செய்யப்படுகிறது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மக்கள் பாதிக்கப்படாமல்  இருக்க கூவி கூவி முககவசம் விற்பனை செய்யப்பட்ட போதிலும், நாமக்கல்  மாவட்டத்தில் இளைஞர்கள், பெண்கள் மத்தியில் முககவசம் அணிவது குறைந்து  போனது. முககவசம் அணியாமல் டூவீலரில் வரும் இளைஞர்கள், போலீசாரை  பார்த்ததும், அருகில் உள்ள சந்து வழியாக தப்பிச்செல்கின்றனர்.கூலி  வேலைக்கு  வேலைக்கு செல்லும் பெண்கள், கையில் கிடைக்கும் துணிகளை கொண்டு  முகத்தில் கட்டிக்கொண்டு, போலீசாரை கடந்ததும், அவற்றை அகற்றிவிட்டு  செல்கின்றனர். கொரோனா வைரஸ் பயமின்றி சுற்றித்திரிகின்றனர். எனவே  மாவட்டத்தில் போலீசார், நகராட்சி அதிகாரிகள், முககவசம் அணியாமல் வருபவர்களை  பிடித்து, கலெக்டர் உத்தரவிட்டபடி ₹100 அபாரதம் வசூலிக்க வேண்டும்.  இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தண்டனை வழங்க வேண்டும் என சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Youths ,Rs ,Teenagers , Teenagers, not wearing , face cover, Rs 10
× RELATED குமாரபாளையம் அருகே கோர விபத்து பனை...