×

இலவச மின்சார திட்டம் தொடரும்; விவசாயத்திற்கு பயன்படுத்தும் மின்சாரத்தை அளவிட மட்டுமே மின்மீட்டர்கள் பொருத்தம்...தமிழக அரசு விளக்கம்

சென்னை: விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் முதன்முதலாக கடந்த 1984ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சார  திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் 1990ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதி, பெரு விவசாயிகளுக்கும் அதாவது அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சார திட்டத்தை அறிவித்தார்.  இதற்கிடையே, ஓரளவு பெரிய விவசாயிகள் நிலத்தடி நீர் மூலம் தண்ணீர் எடுத்து நிலைமையை சமாளித்து வருகின்றனர். சிறு, குறு விவசாயிகளும் வட்டிக்கு கடன் வாங்கி போர்வெல் அமைத்து சாகுபடி செய்து வருகின்றனர். அதுவும் அரசின்  இலவச மின்சாரத்தை நம்பியே போர்வெல் அமைக்கின்றனர்.

தற்போது தமிழகம் முழுவதும் 22 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. இதில் டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் இணைப்புகள் உள்ளன. இதற்கு தற்போது 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.  ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 24 மணி நேரமும் எந்தவித கட்டணமின்றி விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது சாகுபடிக்கு போதாது எனவும், மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தை குறைந்தபட்சம்  20 மணி நேரமாக உயர்த்த வேண்டும் எனவும் நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே, எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் விவசாயிகளுக்காக கொண்டு வந்த இந்த இலவச மின்சார திட்டத்திற்கு சமாதி  கட்டும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மின் பகிர்மானம், கட்டணம், மின் உற்பத்தி என நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, விவசாய பயன்பாட்டிற்கு வழங்கும் புதிய மின் இணைப்புக்கு மின்மீட்டர் பொருத்தப்படுவதால் விவசாயிகள் அதிரிச்சி அடைந்துள்ளனர். மின் மீட்டர்கள் பொருத்தப்படுவதால் இலவச மின்சாரம் பறிபோகும் அபாயம் உள்ளதாக  விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மின்மீட்டர்கள் பொருத்துவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என்றும் விவசாய பயன்பாட்டிற்கு எவ்வளவு  மின்சாரம் செல்கிறது என அளவிட மட்டுமே மின்மீட்டர்கள் பொருத்தப்படுகிறது. இலவச விவசாய மின் இணைப்பு தரும் போது மீட்டர் பொருத்துவது 2 ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

முதல்வர் பழனிசாமி பேட்டி:

இதற்கிடையே, நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான் ஏற்கனவே தெளிவுப்படுத்தியிருக்கிறேன். பிரதமருக்கு கடிதம் மூலமாக தெரிவித்தேன். எல்லா பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது,  ஊடகத்திலும் வந்திருக்கிறது. இலவச மின்சாரம் என்பது எம்.ஜி.ஆர். அவர்களின் கனவுத்திட்டம். அம்மா அவர்கள் அதனை தொடர்ந்து நிறைவேற்றி வந்தார்கள். எங்களுடைய அரசும் விவசாயிகளுடைய நலன் காக்கும் அரசாக திகழ்ந்து  கொண்டிருக்கிறது. இன்றைக்கு இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு தொடர்ந்து கிடைப்பதற்கு எங்களுடைய அரசு துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

Tags : The free electricity project will continue; Electric meters are only suitable for measuring electricity used in agriculture ...
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...