×

ஆண்டிபட்டி பகுதியில் முருங்கை மரங்களை அழிக்கும் விவசாயிகள்: பாசனத்திற்கு தண்ணீரும் இல்லை காய்களுக்கு உரிய விலையும் இல்லை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் போதிய மழை இல்லாததாலும், முருங்கை காய்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும், முருங்கை சாகுபடியை விவசாயிகள் அழித்து வருகின்றனர். ஆண்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில்வார்பட்டி, டி.புதூர், சேடபட்டி உள்ளிட்ட பல ஊர்களில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் முருங்கைக் காய்கள் ஆண்டிபட்டி ஏல மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. அங்கிருந்து வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், போதிய மழை இல்லாததால் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல், முருங்கை சாகுபடிக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஆண்டிபட்டி மார்க்கெட்டில் ரூ.100க்கு விற்பனையான ஒரு கிலோ முருங்கைக் காய், தற்போது ஒரு கிலோ ரூ.25 முதல் 30 வரை விலை போகிறது. இதனால், சில்வார்பட்டி, டி.புதூர், சேடபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முருங்கை மரங்களை வெட்டி அழித்து வருகின்றனர். சில்வார்பட்டி முருங்கை விவசாயி பாண்டியன் கூறுகையில், ‘ஆண்டிபட்டி பகுதியில் போதிய மழை இல்லாததால் முருங்கை மரங்களை வெட்டி அழித்து வருகிறோம். ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பருவ மழையை பொறுத்து மாற்று விவசாயத்துக்கு ஏற்பாடு செய்வோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனர்.

Tags : Andipatti , Farmers destroying, drumsticks , Andipatti, water for irrigation
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...