×

சின்னாளபட்டியில் விஸ்வரூபம் எடுக்கும் கைத்தறி நெசவாளர்கள் கூலிப் பிரச்சனை: கூலிகளை குறைப்பதால் கைத்தறி நெசவை நிறுத்த முடிவு

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் கோரப்பட்டு சேலை நெய்வதற்கு கூலிகளை குறைத்துக் கொடுக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் 1951ம் ஆண்டு அறிஞர் அண்ணா  தலையில் சுமந்து கைத்தறி சேலை விற்ற நிலைமை ஏற்படுமென நெசவாளர்கள் புகார் செய்கின்றனர்.     திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் அமரர் சஞ்சய்காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்கம், அறிஞர் அண்ணா நெசவாளர் சங்கம், கமலாநேரு நெசவாளர் கூட்டுறவு சங்கம், அஞ்சுகம் நெசவாளர் கூட்டுறவு சங்கம் உட்பட 8 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினராக உள்ளனர். இதுதவிர தனியாரிடம் பட்டு நூல் வாங்கி சுமார் ஆயிரம் நெசவாளர்கள் சேலைகளை நெய்து கொடுத்து வருகின்றனர். பழனி, கொழுமம், கனியூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயமுத்தூர், உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து பட்டுசேலைகள் தயாரிக்கும் முதலாளிகளிடம் இருந்து (மாஸ்டர் வீவர்ஸ்) சின்னாளபட்டியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட புரோக்கர்கள் பட்டு நூல்களை வாங்கி வந்து தனியார் நெசவாளர்களுக்கு கொடுத்து சேலைகளை தயாரித்து மாஸ்டர் வீவர்ஸிடம் கொடுத்து வருகின்றனர்.

இதற்கென இவர்களுக்கு சேலை ஒன்றுக்கு ரூ.50 முதல் 100 வரை லாபம் கிடைக்கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சின்னாளபட்டியில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தங்களிடம் இருந்து பட்டு நூல்களை நெசவாளர்களுக்கு சேலை நெய்ய கொடுத்துவிட்டு நூல் (பாவு) இல்லாததால் அப்படியே விட்டுவிட்டனர் இதனால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்கள் சேலை நெய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பதோடு வறுமையில் வாடி வருகின்றனர். இந்நிலையில் மாஸ்டர் வீவர்ஸ் எனப்படும் சேலை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு வேலை இல்லாததை பயன்படுத்திக்கொண்டு தங்களிடம் நெய்யும் நெசவாளர்களிடம் சேலை ஒன்றிற்கு கூலியாக கொடுக்கும் பணத்தில் ரூ.200 வரை குறைத்துக்கொடுப்போம் என கூறி வருவதால் இப்பிரச்சனை நெசவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதவிர கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் தங்களிடம் உறுப்பினராக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு முறையாக பட்டு நூல்களை வாங்கி சேலை நெய்வதற்கு கொடுக்காததால் நெசவாளர்கள் மத்தியில் கூட்டுறவு சங்கங்கள் மீது அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சின்னாளபட்டி வட்டார கைத்தறி நெசவாளர்கள் கூறுகையில், ‘‘கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கோமா நிலையில் செயல்படுவதால் இந்தியாவில் 2வது பெரிய தொழிலான கைத்தறி நெசவு தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நெசவாளர்களை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் கூட்டுறவு சங்கங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Chinnalapatti ,weavers , problem,woven weavers , Chinatapatti
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...