×

தொடர்ந்து 6 வருடங்களாக பணியாற்றி வந்த மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை கமிஷனர் திடீர் இடமாற்றம்

மதுரை: ஆளுங்கட்சி ஆதரவுடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கால வரையறையை தாண்டி, கடந்த 6 வருடங்களாக பணியாற்றி வந்த இணை கமிஷனர் திடீரென சேலத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். மாற்றத்திற்கான பரபரப்பான காரணமும் தெரிய வந்துள்ளது.  மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை கமிஷனர் நடராஜன். இவர் கடந்த 6 வருடங்களாக இப்பொறுப்பில் இருந்து வந்தார். இவர் திடீரென சேலம் இணை கமிஷனராக இடம் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இணை கமிஷனராக பணியாற்றி வந்த செல்லத்துரையை, மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை கமிஷனராக நியமனம் செய்து, இந்து சமய அறநிலைத்துறை கமிஷனர் பணீந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

பரபரப்பு தகவல்கள் :பொதுவாக அறநிலைத்துறையில் அதிகாரி பணி என்பது 3 ஆண்டுகளுக்கு மட்டுமே என்கிற கால வரையறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரை மீனாட்சி கோயில் இணை கமிஷனர் பதவியேற்று கடந்த 6 வருடங்களை அவர் கடந்திருப்பதற்கு ஆளுங்கட்சியினரின் ஆதரவே காரணம் என்கின்றனர். மீனாட்சி கோயிலில் தீவிபத்தால் வீரவசந்தராயர் மண்டபம் உட்பட பல இடங்கள் சேதமடைந்தன. 2 ஆண்டுகள் தாண்டியும் இதன் சீரமைப்பு பணியில், நடராஜன் போதிய கவனம் செலுத்தவில்லை. மேலும், கோயில் வளர்ச்சிப்பணிகள் உட்பட எதிலுமே கவனம் காட்டாமல், கோயில் வருவாய் பெருக்கத்தில் மட்டுமே அக்கறை காட்டி அரசுக்கு ‘நிறைவு’ காட்டி வந்துள்ளார். இதுபோன்ற செயல்களாலேயே இவரது பணிக்காலம் இவ்வளவு நாட்கள் தொடர்ந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழகத்தின் மிக முக்கிய கோயிலான மீனாட்சி கோயில் மேம்பாடுகளில் வளர்ச்சி காணாத நிலை, சமீபகாலமாக பெரும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறதாம். இதைத்தொடர்ந்தே இவரை மாற்றும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம். அதேநேரம், முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் இணை கமிஷனர் பதவியை, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கூடுதல் பொறுப்பாக நடராஜனே கவனித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.



Tags : Madurai Meenakshyamman Temple Joint Commissioner of Sudden Transfer ,transfer , Sudden transfer , Madurai Meenakshyamman Temple Joint Commissioner,6 years
× RELATED கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு?