×

சிறுமி ஜோதி குமாரியின் திறன் கண்டறிந்தால், தேசிய சைக்கிள் ஓட்டுதல் அகாடமியில் பயிற்சியாளராக தேர்வு: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் டுவிட்

புதுடெல்லி: பீகாரை சேர்ந்த சிறுமி ஜோதி குமாரிக்கு மத்திய விளையாட்டு துறையின் பயற்சி அளிக்கபடும் உதவித்தொகை அளிக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அறிவித்துள்ளார். பீகாரை சேர்ந்தவர் மோகன் பஸ்வான். இவர் டெல்லி குருகிராமில் இ-ரிக்க்ஷா ஓட்டும் தொழிலாளி. சமீபத்தில் விபத்தில் காயமடைந்த மோகன் பஸ்வானை பார்க்க அவரது 15 வயது மகள் ஜோதி குமாரி குருகிராம் சென்றுள்ளார்.  இதற்கிடையே, கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஜோதி குமாரி தந்தையுடனே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வருமானம் இல்லாததால் அவர்கள் தங்கியிருந்த வீட்டை காலி வேண்டிய நிலை ஏற்பட்டது.

எந்த போக்குவரத்து வசதியும் இல்லாததால், பழைய சைக்கிளை வாங்கி அதில் தந்தையை வைத்து சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார் குமாரி. அதன்படி, குமாரி சைக்கிள் ஓட்ட பின்னால் அவரது தந்தை பையை வைத்துக்  கொண்டு அமர்ந்து கொண்டார். இரவு பகலாக சைக்கிள் ஓட்டிய சிறுமி, குருகிராமில் இருந்து 1200 கிமீ தொலைவில் பீகாரில் உள்ள தனது சொந்த ஊரை அடைய 7 நாட்கள் ஆனது. சிறுமி, தனது காயமடைந்த தந்தையை வைத்துக் கொண்டு  சைக்கிள் ஓட்டி வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் ஏழை மகளை வெகுவாக பாராட்டினர்.

மேலும், இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, சிறுமி ஜோதியின் தைரியத்தையும், திறமையையும் வீண் போக விடமாட்டோம் என்றும், அவருக்கு சைக்கிளிங் விளையாட்டில் உரிய பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் அறிவித்தது. இந்நிலையில், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தனது டுவிட்டர் பக்கத்தில், ஜோதி குமாரியிடம் சோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு மற்றும் SAI அதிகாரிகளிடம்  கேட்டுக்கொண்டுள்ளேன். அதில், ஜோதி குமாரியின் திறனைக் கண்டறிந்தால், புதுடெல்லியில் உள்ள ஐஜிஐ ஸ்டேடியம் வளாகத்தில் உள்ள தேசிய சைக்கிள் ஓட்டுதல் அகாடமியில் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என்று மத்திய  சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு உறுதியளிப்பதாக பதிவிட்டுள்ளார்.

இவாங்கா டிரம்ப் பாராட்டு:

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவாங்கா டிரம்ப்பும் சிறுமி ஜோதி குமாரியை பாராட்டி உள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘15 வயதான ஜோதி தனது காயமடைந்த தந்தையை பின்னால்  அமர வைத்து 1200 கிமீ தொலைவில் உள்ள சொந்த கிராமத்திற்கு 7 நாட்களாக சைக்கிள் ஓட்டி வந்துள்ளார். அவரது அசாத்திய திறமையும், விடாமுயற்சியும், அன்பும் இந்திய மக்களையும், சைக்கிளிங் கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது,’ என  பாராட்டி உள்ளார்.

Tags : Dwight ,Jyoti Kumari ,National Cycling Academy ,coach , Union Sports Minister Dwight calls for coaching at National Cycling Academy
× RELATED திமுக முதன்முறையாக ஆட்சியமைத்த நாள்...